பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

55


இருக்க முடியாதது தான். வசதியுள்ளவனின் அல்ப பக்திகூட இங்குப் பெரிதாகக் கொண்டாடப்படும்– என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் அவர் இதையெல்லாம் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. அன்றைக்கு அந்தக்கோவில் திருப்பணித் தொடக்க விழாவில் எல்லாரும் வயதில் இளையவரான அவரைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். எதைச் செய்ய வேண்டுமானாலும் அவரருகே பயபக்தியோடு வந்து வாய்பொத்தி வினாவி, அவரது நோக்கம் தெரிந்து கொண்டு அப்புறம் செய்தார்கள். கடவுளுக்கு முன்னால் அவரது சந்நிதியிலேயே மனிதன் பக்தி செய்யப்படுவது பரிதாபகரமானது தான் என்றாலும் அதுதான் அங்கே தாராளமாக நடந்தது. அர்ச்சகர்களிலிருந்து கோவில் நிர்வாக அதிகாரிகள் வரை சகலரும் மந்திரியையும் கமலக்கண்ணனையுமே சுற்றிச் சுற்றி வந்தார்கள். கடவுள் கழுத்திலிருந்த மாலைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றி மந்திரிக்கும், கமலக்கண்ணனுக்கும் போட்டுத் தலையில் பரிவட்டமும் கட்டி மரியாதை செய்தார்கள். கடவுளை மரியாதை செய்கிற பாவனையில் இடுப்பில் கட்டிய வேட்டியும், நெற்றியில் விபூதிப்பட்டையுமாக வருகிறவர்களுக்கு மிரண்டு ‘கடவுளே’ பதில் மரியாதை செய்வது வேடிக்கையாகத்தான் இருந்தது மரியாதைகள் முடிந்தபின் கோவில் முன் மண்டபத்தில் திருப்பணிக் குழுவின் கூட்டம் நடை பெற்றது. மந்திரி தான் தலைமை தாங்கினார். இடுப்பில் தயாராகக் கிழித்துச் சொருகிக் கொண்டு வந்திருந்த ஒற்றை ‘செக்’ தாளை எடுத்து அதில் ஒரு பெரிய தொகையைப் பூர்த்தி செய்து ‘கடம்பவனேசுவரர் கோவிலில் புனருத்தாரண நிதிக்காக நான் அளிக்கும் இரண்டாவது பகுதி நன்கொடை’– என்று மந்திரியிடம் நீட்டினார். கமலக்கண்னன். “நம் தொழிலதிபர் கமலக்கண்ணன் இந்தத் திருப்பணி நிதிக்கு ஏற்கெனவே ஒரு கணிசமான தொகை அளித்திருப்பதை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள். இன்று மறுபடியும் அவர் ஒரு பெரிய தொகைக்குச் செக் அளித்திருக்கிறர்”– என்று மந்திரி கூட்டத்திலேயே அதை அறிவித்த