உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டு அறுவைச் சிகிச்சைகள் கண்ணிற்குள் கீறல் விழுந்திருந்த நரம்பில் தேங்கியிருந்த சீழை வெளிப்படுத்துவதற்காக நடைபெற்ற சிறிய அளவு அறுவைச் சிகிச்சைகளாகும். ஒவ்வொரு முறையும் அறுவைச் சிகிச்சை அறைக்குச் செல்வதற்கு முன்பு, கண் இமைகளை அசையாமல் செய்வதற்காகக் கன்னத்திலே ஒரு நெடிய ஊசியும், கண்ணின் இமைக்குக் கீழே ஓர் ஊசியும் போட்டு அந்தப் பகுதியை உணர்ச்சியில்லாமல் ஆக்குவார்கள். அறுவைச் சிகிச்சையைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஐயோ! அந்த ஊசிகளை இப்போது நினைத்தாலும் எனக்கு நடுக்கம் எடுக்கிறது! இப்படிப் பன்னிரண்டு முறை ஊசிகளைப் போட்டுக் கொள்வது என்றால் சாதாரண வேதனையா? அன்று கண்ணில் ஊசி குத்திய வேதனை எனக்கு எப்போது குறைவாகத் தெரிகிறது தெரியுமா? என் மனப் புண்ணில் சில பேர் ஊசி குத்துகிறார்களே, அப்போது தான் அன்று கண்ணில் குத்தப்பட்ட ஊசியின் வேதனை எனக்குக் குறைவாகத் தென்படுகிறது. இந்தச் சிகிச்சையின்பொழுது ஒரு நாள் ஒரு வேதனையான வேடிக்கையும் நடந்துவிட்டது. அறுவைச் சிகிச்சை அறைக்கு முன்பு பல கண் நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள். என்னைப் பரிசோதிப் பதற்கு டாக்டர் முத்தையா அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். நான் அந்த நோயாளியோடு உட்கார்ந்திருந்த பொழுது உதவி டாக்டர் ஒருவர் என அருகே வந்து என் கன்னத்திலும், கண்ணிலும் இரண்டு ஊசிகளைப் போட்டுவிட்டார். அதற்குப் பிறகு என்னை அறுவைச் சிகிச்சை அறைக்கு உள்ளே அழைத்துப் போனார்கள். அறுவை நடை பெறும் பலகையில படுக்க வைத்தார்கள். டாக்டர் முத்தையா என் அருகே வந்தார். "இவரை ஏன் கொண்டு வந்தீர்கள்? இவருக்கு இன்று அறுவைச் சிசிச்சை கிடையாதே!" என்று அவர் சொன்ன பிறகுதான் உதவி டாக்டர் செய்து விட்ட தவறு அனைவருக்கும் தெரிந்தது. எனக்கு இருந்த வேதனையில் அது ஒரு நல்ல துணை வேதனை! இவ்வாறு என்னுடைய கண் மருத்துவ மனை வாழ்வு ஆறு மாத காலம தொடர்ந்தது. அந்த ஆறு மாதமும், எழும்பூர் கண் மருத்துவ மனையில், சிறப்பு அறையில் வலி தாங்க முடியாமல் துடித்துக்கொண்டு படுக்கையிலே இருந்தேன் . கல்லக்குடிக்காகச் சிறைச்சாலையிலே ஆறு மாதம்! கண் சிகிச்சைக் காக மருத்துவமனையிலும் ஆறு மாதம்! 266