பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகள் என்றால், அத்தகு கைகளைக் கொண்ட அம்மகளிர் முழு உருவம் எத்தகு பெருமையுடையதோ என்ற வியப்பு உந்த, அம் மகளிரை விழித்து நோக்கினார். ஒருமுறை காண நேர்ந்தாரை, மறுமுறையும் காண வேண்டும், மறு முறையும் காண வேண்டும் எனத் தூண்டத்தக்க இனிய சாயல் வாய்க்கப் பெற்றிருந்தனர் அம்மகளிர்.

அம்மட்டோ, முத்துப் பே ன் ற வெண்பற்கள் வெளிப்பட, இனிய புன்னகை மலர்த்தும் மாண்புடையது அவர் வாய். காதுகளில் பொன்னாலான மகரக் குழைகள் ஒளிவீசிக் கொண்டிருந்தன. உற்றார், உறவினர் பால் அன்பையும், ஏனையோர் பால் அருளையும் வாரி வழங்கும் அவர் கண்கள் வீசும் ஒளியால், மகரக் குழைகளின் ஒளி மங்குவது கண்டார். இவ்வளவு சிறப்பையும் ஒருங்கே பெற்றிருந்தும், அம் மகளிர், மகளிர்பால் அமைய வேண்டிய இயற்கைப்பண்பாம் மடப்பத்தை-அடக்கத்தைக் குறைவறப் பெற்றிருந்த சிறப்பினையும் கண்டார்.

அம்மகளிர் நலம் பலவும் கண்டு வியந்த புலவர், மனை யகத்தே, அவர்கள் ஆற்றும் மனையற மாண்பினைக் காண விரும்பி, அவர்களின் மனைக்குள் புகுந்தார். தெருவில் விளக்கேற்றி வைத்த மகளிர், மனைபுகுந்ததும், மனையின் கருவறைப் பகுதியில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் இல்லுறை தெய்வங்களின் முன் நின்று, நெல்லும் மலரும் தூவிக் கைகூப்பி வணங்கி வழிபாடாற்றும், விழுமிய செயல் கண்டு விம்மிதம் உற்றார்.

மனையுறை மகளிர் மாண்புகண்டு. மனம் குளிர்ந்த புலவர் அடுத்து மாநகர்க் கடைவீதிகளை நோக்கி நடந்தார்.

33