பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi


தான், நான், இந்த படைப்புபற்றி பெருமிதப்படலாம். இந்த நாவலில் வரும் கலாவதி போன்றோர் காலாவதியாகிறார்களே தவிர, இவர்கள் மீது எய்யப்படும் கொடுமைகள் காலாவதியாகவில்லை. இன்றைய வர்த்தகக் கலாச்சார சமூகம் பாழ்பட்டுப்போய், வர்க்க பேதமற்ற புதிய சமூகம் உருவாகும்போது, இன்றைய கொடுமைகள், அன்றைய தடயங்களாகத்தான் இருக்குமே தவிர, தடமாக இருக்காது என்று நம்புவதும், நான் இந்த நாவலுக்கு 'நெருப்புத் தடயங்கள்' என்று பெயரிட்டதற்கு ஒரு காரணம்.

'தேவி'யில் தொடர்கதைக்கு, கதைச் சுருக்கம் கொடுத்தபோது இந்த நாவலில் நடமாடும் தாமோதரனை, போலீஸ்காரர்களுக்கே இயல்பாகவுள்ள முரட்டுத்தனத்தோடுதான் படைத்திருந்தேன். 'தேவி' ஆசிரியர் திரு. ராமச்சந்திர ஆதித்தன், அந்த கேரெக்டருக்கு மனிதாபிமானம் கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தார். நானும் யோசித்துப் பார்த்தேன். 'எரிகிற வீட்டில், பிடுங்குவது ஆதாயம்' என்று ஆகிவிட்ட இந்தக் காலத்தில் எல்லாத் துறைகளும், 'துரைத்தனமாகத்தான்' நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள், இதர துறைகளை மோதினால், பணத்திற்குத்தான் 'ரிஸ்க்', அதே சமயம் காவல் துறையென்றால், உயிருக்கே ரிஸ்க் என்பதால் அது, அரசின் வெளிப்பாட்டு சக்தியாக (Visible power) இயங்கு கிறது. இங்கேயும், தனிப்பட்ட முறையில், எத்தனையோ நல்லவர்கள் உள்ளார்கள். அதோடு, மூடத்தனத்தை தன்மானமாகவும், போக்கிரித்தனத்தை வீரமாகவும் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில், அரசுப் பணிக்கு முதன்முதலாகச் செல்லும் இளைஞன், அந்தக் குடும்பத்தின் வறட்டுக் கௌரவத்திற்கு பகடைக்காயாவதுண்டு. இதில் அவனுக்கு உடன்பாடு உண்டா, இல்லையா என்பது தான் பிரச்னை, உடன்பாடு காண முடியாதவன். சிந்தனை சித்ரவதைக்குள் அகப்படுவதைத் தவிர, வேறு வதைகளுக்கும் உட்படுவான். இப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவனாக, தாமோதரனை சித்தரிக்கலாம் என்றும், நான் 'பின்யோசனை' செய்தபோது தோன்றியது.

இப்போது நினைத்துப் பார்த்தால், தாமோதரனை, மனிதாபிமான விரோதியாகக் காட்டியிருந்தால் சரியாய் இருக்காது என்றே கருதுகிறேன். பாவப்பட்ட இந்தக் காலத்தில், பத்திரிகை ஆசிரியர்களின் பார்வை விரிசலாகிக்