பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நெருப்புத் தடயங்கள்

தமிழரசி வீட்டுக்குள் போகப் போனபோது—

வெளியே உரக்க சத்தம் கேட்டது. சத்தம் முடியு முன்னாலேயே, தமிழரசியின் சித்தப்பா மகன், ஒரு வாலிபனை கழுத்தோடு சேர்த்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தான். தமிழரசியின் முன்னால் அவனை நிறுத்திவிட்டு “ம்...என் தங்கச்சி காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறியா...மண்டைய ஒரேயடியாய் உடைக்கட்டுமா” என்றான்.

இதற்குள், வெளியே இருந்து நான்கு பேர் ஓடி வந்தார்கள். ஆயுதம் தனியாகத் தேவையில்லை என்பது போன்ற உடம்புக்காரர்கள்! வந்தவர்களில் ஒருவன் “டேய் வினைதீர்த்தான்... இப்போ கொலை விழணுமுன்னு நினைக்கியா” என்று அதட்டினான். வினைதீர்த்தான் கீழே கிடந்த மண்வெட்டியைப் பார்த்தான்.

2

மிழரசி, தன் முன்னல் பூணிக் குருவி மாதிரி, கூனிக் குறுகி நின்ற அந்த வாலிபனைப் பார்த்தாள். அவனுக்கு வக்காலத்து வாங்குவது போல் அரட்டலோடு வந்து நின்று அரட்டிய அந்த நால்வரையும் பார்த்தாள். பிறகு ஒன்றும் புரியாமல், சித்தப்பா மகன் வினைதீர்த்தானைப் பார்த்தாள். இதற்குள் உள்ளே இருந்து பகவதியம்மாளும், பொன்மணியும், கலாவதியும் ஒடி வந்தார்கள்.

வீட்டுக்குள் வந்த நால்வரில் ஒருவர் நடுத்தர வயது மனிதர். எவராக இருந்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பவர். ‘இன்றைக்கு மழை வரும்’ என்று யாராவது சொன்னால் ‘எப்டி வரும்’ என்பவர். வராது’ என்றால் ‘ஏன் வராது, வரும்’ என்பவர்.