பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

27

.

கோபப்பட்டு அறியாத பெரியப்பா மகளின் பேச்சால் திக்கு முக்காடிய கலாவதி, அவளை விகற்பத்தோடு பார்த்தாள். தமிழரசியோ, தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள். தாமோதரனும், தன்பாட்டுக்கு நாலடி நடந்தான். பிறகு "இந்த ரெண்டு கல்யாணத்தையும் ஒரே பந்தலுல நடத்துறதுக்கு ஒங்க வீட்டுக்கு ஆட்சேபம் இருக்காதே" என்றான்.

வேகமாக நடக்கப்போன தமிழரசி நின்றாள். அவனே நோக்கித் திரும்பாமலே, கண்களைத் துடைத்தபடி, சட்டென்று பதிலை ஒரே வெட்டாய் வெட்டி, இரண்டு துண்டுகளாக்கினாள்:

"ஒங்க கல்யாணத்தை முன்னலயாவது பின்னலயாவது வச்சுக்கங்க. நான் என்னோட அண்ணன் கல்யாணத்தை மட்டுந்தான் பார்க்க விரும்புறேன்.”

தமிழரசி தன்னையறியாமலே, தனக்குள் ஒரு முறை கூட கேட்டுக் கொள்ளாமலே பேசியதற்கு, வருந்தாதவள் போல் அவர்கள் இருவருக்கும் முதுகைக் காட்டியபடியே நின்றாள். கலாவதி, தமிழுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய விரும்பியவளாய் அவள் தோளைப் பிடித்து தன் நாக்கைக் கடித்தாள். தாமோதரனுக்கும் லேசாகக் கோபம் வந்தது. சென்னையில் வேலை பார்ப்பதால், மனதளவிலாவது சிதைந்து போயிருப்பாளோ என்ற சந்தேகம். இளக்காரமாகவே கேட்டான்:

"பொன்மணி ஒங்கமேல உயிரையே வச்சுருக்காள், அவள் கல்யாணத்தைப் பார்க்க ஒங்களுக்குப் பிடிக்கலியா? ஒங்களை மெட்ராஸ் ரொம்ப மாத்திட்டுன்னு நினைக்கேன்.”

தமிழரசிக்கு அவனைப் பார்த்து, தான் எப்படித் திரும்பினோம் என்பது புரியவில்லை. ஐஸ் கட்டி உருகி, நெஞ்சுள் நீர் பிரவாகமாகியது. அவசர அவசரமாகக் கேட்டாள்: