பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

81

பூட்ஸ் காலால் உதைத்து, கீழே தள்ளியபடி “ஏண்டா கிழட்டுப் பயலே! இன்னும் ஒன் மகன் இருக்கிற இடத்தை சொல்ல மாட்டக்கே... போலீஸ்காரன்னு நெனச்சியா, ஒன் மாமன்னு நெனச்சியா? ஒன் மகன் இருக்கிற இடத்தைச் சொல்லல, நீ போக வேண்டிய இடத்துக்குப் போயிடுவே" என்று, மல்லாக்கப் புரண்ட மாடக்கண்ணுவின் தலையை காலால் இடறினார். அந்த மனிதரோ எதுவும் பேசாமல், ஏறிட்டு நோக்காமல், உடைந்துபோன மண் சட்டிபோல் கிடந்தார். அப்பாவை நெருங்கப் போன கலாவதியை, ஒரு போலீஸ்காரர் தொண்டையைப் பிடித்து, மல்லாக்கத் தள்ளி, அவள் கீழே விழப்போன போது, அவள் தலைமுடியைப் பிடித்திழுத்து, 'பாலன்ஸ்’ செய்தார்.

தமிழரசிக்கு பிரக்ஞை வந்தது. தான் தமிழரசி என்பதும், தான் நிற்பது சித்தப்பாவீடு என்பதும், அடிப்பது போலீசார் என்பதும், அடிக்கச் சொல்வது முத்துலிங்கம் என்பதும், அடிபடுவது அபலை என்பதும் புரிந்தது. புரியப் புரிய புத்துயிர் பெற்றாள். கீழே புரண்டு கொண்டிருந்த சித்தப்பாவை நோக்கி ஓடி, கீழே குனிந்து உட்கார்ந்து, அவர் தலையைத் தூக்கி நிறுத்தி, போலீசாரை பரவலாகப் பார்த்தபடியே கத்தினாள். இடி முழக்கமாய் ஒலித்தாள். சித்தப்பா குளித்த ரத்தம் தன்னையும் குளிப்பாட்ட, ரத்த வாடையை சுவாசித்து, ஆங்காரியாய், ஒங்காரியாய், வீங்காரியாய், காட்டுக் கத்தலாகக் கத்தினாள்.

“நிறுத்துங்கய்யா. நீங்கெல்லாம் போலீஸ்காரங்களா, இல்ல... வேண்டாம், என் வாயால அதைச் சொல்லி கண்ணியமாய் வேலை பார்க்கிற போலீஸ்காரங்களையும் ஒங்களோட சேர்க்காண்டாம். ஒங்களப் பார்த்தால் சட்டத்த காப்பாற்ற வந்த வங்கமாதிரி தெரியல. நீங்க சட்டப்படி உள்ள ரவுடிங்க மாதிரி நடந்துக்கிறீங்க.

நெ. - 6