பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘டி’ வகுப்புக் கைதி என்ற முறையில், ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை, வெளியிலிருந்து ஒரே ஒரு நபர் வந்து மண்டேலாவைக் கண்டு பேசலாம் என்ற உரிமை இருந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரே ஒரு கடிதம் எழுதி அனுப்பவும், ஒரு கடிதம் பெறவும் அவருக்கு உரிமை உண்டு. சிறை நடைமுறைகளில் இருந்த கட்டுப்பாடுகளில் இது மிகவும் மனிதத் தன்மை இல்லாத மோசமான செயலாக அவருக்குப்பட்டது.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களோடும் தொடர்பு கொள்வது ஒவ்வொரு மனிதருக்கும் உரிய உரிமை ஆகும். சிறை நடவடிக்கைகளில் செயற்கைத்தனமாக நிர்ணயிக்கப்பட்ட வகுப்புப் பிரிவுகளின் பேரால் இந்த உரிமையைக் கட்டுப்படுத்துவதும், அதற்குத் தடை விதிப்பதும் முறையல்ல. இது மண்டேலாவின் எண்ணமாகும். ஆனாலும் சிறை வாசத்தின்போது இம் முறையற்ற கட்டுப்பாடு அனுபவித்தே தீரவேண்டியது உண்மையாக இருந்தது.

பார்க்க வருகிறவர்களும், கடிதங்கள் எழுதவும் பெறவும் உரிமை பெற்றவர்களும் மிக நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடும் தொல்லை நிறைந்த விவகாரமாகவே இருந்தது.

ஐரோப்பியர் அல்லது மேற்கத்தியரின் குடும்ப உறவுகளுக்கும், ஆப்பிரிக்கர்களின் மிக நெருக்கமான உறவு முறை என்ற செயல்பாட்டுக்கும் அதிகமான வித்தியாசம் உண்டு.

ஆப்பிரிக்கர்களின் குடும்ப உறவுகள் மிக விசாலமானவை. அதிகமான நபர்களைக் கொண்டிருக்கக் கூடியது அவர்களது குடும்ப அமைப்பு. பொதுவான மூதாதையர் ஒருவர் வழிவந்தவர் என்று சொந்தம் கொண்டாடக் கூடிய எவரும் ஒரு குடும்பத்துக்கு நெருக்கமான உறுப்பினராகவே மதிக்கப்படுவது வழக்கம்.

சிறை வாழ்க்கையில், ஒருவரது குடும்பத்தைப் பற்றிய துயரமான செய்தி கிடைக்கப் பெறுவது மோசமானதுதான்.


36 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா