பக்கம்:நேசம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் மீசை15


கிடந்த தையல் சட்டத்தையும், ஒன்றிரண்டு பாத்திரங்களை யும் உதைத்துத் தள்ளிவிட்டு, வாசற் கதவைப் படாரென்று சாத்திக்கொண்டு, வெளியே போய்விட்டார். அம்மா மெல்ல எழுந்திருந்தாள். அம்மாவைப் பார்க்கச் சஹீக்கவில்லை. தலை மயிரும் துணியும் அலங்கோலமாய்ப் போயிருந்தன. வலது கையில் ஒரு வளையல் உடைந்து, இசைகேடாய் மணிக்கட்டில் கீறி, ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. அம்மா வாயைத் திறந்து அழவேயில்லை. "பொய்’க் கன்றுக்குட்டியை மடியில் முட்ட விட்டுத் தெருவில் பால் கறக்கும் பால்காரனின் பசுவைப் போல், அம்மாவின் கண்களில் கண்ணிர் தாரை தரையாய் வடிந்துகொண்டிருந்தது. அவள் இரண்டொரு தடவை முன்றானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். ஆனால், கண்ணிர் நிற்கவில்லை. அது துளித்துக்கொண்டே யிருந்தது; கணகணவென்று நெருப்பு மாதிரி கொதித்தது அந்தக் கண்ணிர் அம்மா அப்புறம் அதைத் துடைப்பதையும் நிறுத்திவிட்டாள்; தன்னிச்சையாய் அது வழிந்துகொண்டே யிருந்தது. அதோடு அவள் எழுந்திருந்து, வளையல் துணுக்கையெல்லாம் சீராய்ப் பொறுக்கி வாசலில் எறிந்து விட்டு, இவனுக்குத் தலையை வாரி, பொட்டிட்டு, சொக் காயும் நிஜாரும் போட்டுவிட்டு, புத்தகப் பையைத் தோளில் மாட்டிவிட்டு, இவனைப் பள்ளிக்கூடம் போகத் தயார் செய்துவிட்டு, அவள் மாத்திரம் சமையல் உள்ளுக்குள் போய் முன்றானையை விரித்துக் குப்புறப் படுத்துவிட்டாள். சமையல் உள் வாசல்படிக்கு அந்தப் பக்கம் ஒரு காலும் இந்தப் பக்கம் ஒரு காலுமாய், இவன் தயங்கித் தயங்கி நின்றான். அவளைத் தேற்ற ஆயிரம் யோசனைகள், இவனது உள்ளத்தில் எழுந்தன. ஆனால், வெட்கமும் வார்த்தைகளும் வந்து தொண்டையை அடைத்தன. அம்மாவை இப்படி விட்டுப் போக, அவனுக்கு மனம் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/21&oldid=1403444" இலிருந்து மீள்விக்கப்பட்டது