பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99



"எவ்வளவுடா?" என்று வேண்டா வெறுப்பாகக் கேட்டார்தந்தை

"ஸெகண்ட் கிளாசுக்குப்பதினஞ்சு ரூபாய்."

கைலாச முதலியாரின் குரல் திடீரென்று வக்கிர கதி பெற்று விட்டது.

"ஸெகண்ட் கிளாஸ்! இனிமே நீ ஒன்னும் ஸெகண்ட் கிளாஸிலே போக வேண்டாம். மூணாம் கிளாஸிலேயே போனாப் போதும். உன் செலவுக்கின்னு மாசம் அம்பது ரூவா தந்தும் உனக்குப் பத்தெலெ. வீட்டு நிலைமை தெரியாமல், நீவிளையாடுதே.நினைச்சு நினைச்சவாக்கிலே சினிமாவுக்குப் போறதும், போத்தி ஹோட்டல்லெ கணக்கு வைக்கிறதும்" -

மணிக்குத் திடுக்கிட்டது, தன் தந்தை இவ்வாறு ஆத்திரத்தோடு பேசி அவன் அறிந்ததில்லை. அவரது எதிர்பாராத திடீர்த் தாக்குதலின் , காரண காரியம் அவனுக்குப் புரியவில்லை . எனினும் அவரது அந்தச் சுடுசொல் அவனது சுயமரியாதையையேபங்கப்படுத்துவது. போல், அவமானப் படுத்துவது போல் நெஞ்சில் உறைந்தது.

அவர் பேசி முடிப்பதற்குள்ளாகவே அவன் தன்னையும் அறியாமல் குறுக்கிட்டான்: "நான் செலவழிக்கிறதிலேதான் குடிமுழுகிப் போவுதாக்கும்!"

கைலாசமுதலியாருக்குக் கண்கள் சிவந்தன;உதடுகள் துடிதுடித்தன; அவருக்கும் தமது சுயமரியாதை, அதிலும் தாங்க முடியாத மனவேதனையினால் தவிக்கும் தமது தன்மானம் வடுப்பட்டுப் போனதுபோல் தோன்றியது. அடிபட்ட பாம்பு போல் அவர் சீறியெழுந்தார்.

"ஏண்டா , எதிர்த்தா பேசறே?" அவர் குரல் கடூரமாக ஒலித்தது: “நானே நொந்து போய்க் கிடக்கிறேன். என் உயிரை வாங்காதே இனிமே, நீ உன் செலவையெல்லாம் ஒரு திட்டப்படுத்திச் சுருக்குற வழியைப் பாரு!”