பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


ஆதாயக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்த வேளையில் 'அவரது மனைவி தர்மாம்பாள் அங்கு வந்து சேர்ந்தாள்.

”இந்தாங்க."

மனைவியின் குரல் கேட்டுக் கண் விழித்தார் தாதுலிங்க முதலியார்.

"எங்கேவந்தே ?"

“மணி ஒன்பது அடிக்கப்போவுது. சாப்பிட வேண்டாமா?"

"சரி சங்கர் எங்கே? வீட்டில் இல்லையா?"

"இல்லெ, திருநெல்வேலிக்குப் போயிருக்கான். காலையில வந்து விடுவதாகச் சொல்லிட்டுப் போனான், சினிமாப் பார்க்கப் போறதாகச் சொன்னான்."

"திருநெல்வேலியில் இவனுக்கு என்ன சோலி? அவனைப் பத்தி என்னென்ன பேச்செல்லாம் வருது, தெரியுமா? எனக்குப் பிறந்த புள்ளெ இப்படி கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான்னு நான் நினைக்கவே இல்லெ!" என்று வருத்தமும் கோபமும் கலந்து குமுறும் வார்த்தைகளில் சொன்னார் தாதுலிங்க முதலியார்.

அவரது பேச்சு தர்மாம்பாளின் மனத்தைத் திடீரென்று கலக்கியது. அவள் எண்ணாததெல்லாம் எண்ணினாள், பிறகு கணவனை நோக்கி, "நீங்க என்ன இப்படிச் சொல்லுதிய சங்கரைப்பத்தி அப்படிச் சந்தேகப்பட முடியமா? அவனாவது, தாறுமாறா அலையுறதாவது? யார் சொன்னா அப்படி?” என்று உரிமையோடு கேட்டாள்.

"நீ நினைக்கிறமாதிரி கெட்டழிஞ்சிருந்தாக்கூட, நான் கவலைப்பட மாட்டேன். ஒரு கலியாணத்தைப் பண்ணி, பெண்டாட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டால் சீராயிருவான் என்றாவது தேற்றிக் கொள்வேன். ஆனால்; அவன் என் குடியையில்லா கெடுத்துருவான் போலிருக்கு!