பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


 "அடகுமில்லே, ஒண்ணுமில்லே. அதெல்லாம் அந்தக் கைலாச முதலியார் வீட்டு நகை. அவன் வியாபாரத்தை நடத்தத் தெரியாம நடத்தி, கெடுத்துக்கிட்டான் அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியிலே குடை பிடிக்கிற மாதிரி, என்னமோ கோயில் தர்மகர்த்தா ஆனதிலே, கிடைக்காத பதவி கிடைச்சிட்ட மாதிரி, 'டாம் டூம்'ணு செலவு பண்ணிக் கெட்டுக்குட்டிச்சுவராப்போனான். நம்ம பாக்கிக்கு அவன் இன்னம் ஆறாயிரத்துச் சில்வானத்துக்கு மேலே தரணும். நம்ம கடனுக்காக, அவன் கொடுத்தனுப்பின நகைதான் அது!"

கணவனின் பதிலைக் கேட்டு தர்மாம்பாளுக்கு உள்ளூர இனம் தெரியாத கலவரமும் பயமும் ஏற்பட்டது. எனினும், அவள் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் மேலும் பேசினாள்:

"அதென்ன அப்படிச் சொல்லுதீக? அவரு ரொம்ப நல்லவருன்னு எல்லாரும் சொல்லுதாக..."

அவளது பேச்சைத் தாதுலிங்க முதலியார் முடிக்க விடவில்லை; சட்டென்று குறுக்கிட்டு விஷயத்தை தெளிவு பண்ணினார், அவர்:

"எல்லாம் ஒரு அளவோட இருக்கணும், தர்மா."

தர்மாம்பாளுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. திகைத்தாள்; மருண்டாள்; அவளது உதடும் உள்ளமும் துடியாய்த் துடித்தன. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, அவள் உள்ளடங்கி நின்ற நிதானத்தோடு பேசமுனைந்தாள்:

"நானும் உங்களிடம் ஒரு விசயம் சொல்லணும்'ணுதான் இருந்தேன். நீங்களானா: இப்படிக் காரியம் செஞ்சிருக்கீக" என்று குறைப்பட்டுக் கொண்டாள்.

"என்னது?" என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்து உட்கார்ந்தார் தாதுலிங்க முதலியார்.