பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158


அவரது பேச்சைக் கேட்டதும், சங்கருக்கு உள்ளம் குமைந்தது;ரத்தம் கொதித்தது; வெட்கம்பிடுங்கித்தின்றது. இன்னபதில் சொல்வதெனஓடாமல்ஒருகணம் உள்ளுக்குள் குமுறினான். ஆனால் மறுகணமே அவனது வாய்ப்பூட்டு உடைந்து விட்டது.

"பெரியவரே, என் அப்பாவின் பணத்தாசைதான் கைலாச முதலியாரின் உயிரையே குடித்தது என்பது எனக்குத்தெரியும். அதை நினைத்து நினைத்து நானும்தான் வருத்தப்படுகிறேன்; நெஞ்சு குமுறுகிறேன். இப்படிப்பட்ட ஈவிரக்கமற்ற மனிதர் எனக்குத் தந்தையாக வந்து வாய்த்தாரே என்று வெட்கமடைகிறேன். ஆனால், நீங்களும் நானும் சேர்ந்து என் தந்தையைத் திட்டுவதன் மூலம் ஆகப்போவது என்ன? அதனால் உங்கள் கவலை தீர்ந்து விடுமோ? கைலாசமுதலியார் ஒருவர் மட்டும்தானா கஷ்டப்பட்டார்? இப்போது நீங்களெல்லாம் கஷ்டப்படவில்லையா? உங்கள் பிழைப்பு ஏன் இந்த அங்கோலத்துக்கு வந்தது என்று யோசித்துப் பார்த்தீர்களா?" என்று மளமளவென்று உணர்ச்சி வசப்பட்டவனாய்ப் பேசி முடித்தான் சங்கர்.

அவன் பேச்சைக் கேட்டதும் அங்கிருந்த யாருக்கும் மறுவார்த்தை சொல்ல ஓடவில்லை. பிரமை பிடித்தவர்கள் போல் பேசாது இருந்தார்கள். சில கணங்கள் அங்கு அர்த்த புஷ்டியுள்ள ஒரு அமைதி நிலவியது.

அங்குநிலவிய அமைதியை வடிவேலு முதலியார் தான் கலைக்க முன்வந்தார். "வா தம்பி, இப்படி உட்காரு" என்று சங்கரை அழைத்து, தமக்கு அருகில் உட்காரச் சொல்லியவாறே, "தம்பிசொல்றதும் சரிதானே.நாம என்னைக்காவது யோசிச்சுப் பார்த்தோமா?" என்று அங்கு கூடியிருந் தோரைப் பார்த்து ஒரு கேள்வியைப் போட்டார். பிறகு அவர். சங்கரிடம் திரும்பி, "சங்கர் உனக்குத்தான் எல்லா விசயமும் தெரியுமே. இப்ப இருக்கிற நிலைமை எப்பப்பா மாறும்?" என்று பரிதாபத்தோடு கேட்டார்.