பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177


வாதத்தைப் பற்றி சங்கரிடம் பிரமாதமாகச் சொல்லிக் கொண்டான். கமலாவுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நட்பு நீண்ட நாள் தொடர்பாலும், மணியின் குணநலங்களாலும் உரம் பெற்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கத் தன்னால் ஆனதை செய்வதாக, சங்கர் கூறியபோது கூட அவன் அந்தத் திருமணம் நடப்பதற்கான சூழ்நிலையின் சாதக பாதகங்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவில்லை. என்னவோ கல்யாணமே நிச்சயமாகிவிட்டது போல் கனவுலகில் நீந்தத் தொடங்கிவிட்டான் மணி.

சுருங்கச் சொன்னால் மணி எதையும் எதிர்த்துப் போராடும் சக்தியோ தைரியமோ அற்றவனாக வளர்ந்து வந்திருந்தான். கமலாவிடமும், சங்கரிடமும் காணப்பட்ட தைரியமோ, தனது விருப்பத்துக்கு எதிரானவற்றை எதிர்த்துப் போராடும் மனப்பான்மையோ மணியிடம் இல்லை. வெற்றி என்பது தானே தன்னை வந்து சேரவேண்டும் என்று கருதுபவன் போலிருந்தான் மணி;அதனால்தான் தாதுலிங்கமுதலியார் கமலாவைத் தனக்குத் தரச் சம்மதிக்கவில்லை என்று தெரிந்தபோது, தன் காதலுக்கு முடிவு காலம் வந்து விட்டதென்றே கருதிப் பயந்தான்; எத்தனை தாதுலிங்க முதலியார்கள் எதிர்த்த போதிலும், தான் விரும்பும் கமலாவைத் தான் மணந்தே தீருவேன் என்று சொல்லக்கூடிய வைராக்கிய சித்தம், தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை . கமலாவும் சங்கரும் தான் அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட முயன்று வந்தார்கள்.

உலகப் போக்கின் நெளிவு சுழிவுகளைப் பற்றியும், தன்மைகளைப் பற்றியும் மணிக்குத் தெளிவான அபிப்பிராயமில்லை யென்றாலும், அவற்றைப் பற்றிய பிரக்ஞைகூட இருந்ததில்லை, 'மணியின் குணாதிசயங்களுக்கும் புத்திக் கூர்மைக்கும் அவன் மட்டும் உலகத்தைப்பற்றிக் கவலை கொண்டால் பிரத்தியட்ச