பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


சொன்ன புத்திமதி ஞாபகத்துக்கு வந்தது. தைரியமாய் இருங்கள்”. டாக்டரே பக்கத்திலே வந்து நின்று அப்படிச் சொல்லுவது போல் அவனுக்குப் பட்டது.

கட்டிலில் படுத்திருந்தவாறே மணி சென்றுபோன விஷயங்களைச் சிந்தித்துப்பார்த்தான். தந்தை தற்கொலை செய்து கொண்டார்; தம்பி இறந்துவிட்டான். நானும் இப்படி வந்து விழுந்து கிடக்கிறேன். அம்மா தன்னந்தனியாக என்ன பாடுபட்டாளோ? என்ன அவதிப்படுகிறாளோ?_ இனிமேல் நான் எப்படி உயிர் வாழப் போகிறேன்? தைரியம் வேண்டும். டாக்டர் சொல்வது போல், அன்று மட்டும் நான் தைரியத்தோடு இருந்திருந்தால், செத்துப்போன என் தம்பியையும், தந்தையையும் பார்க்கக்கூட கொடுத்து வைக்காத இந்த அவல நிலைக்கு ஆளாயிருக்க வேண்டாம் என் தைரியக் குறைவுதான் என்னை இருந்தும் இல்லாதவனாகச் செய்து விட்டது.ஆனால், இத்தனை அலங்கோலங்களுக்குப் பிறகு, எனக்குத் தைரியம் எங்கிருந்து வரும்...?'

இரவு முழுவதும் சரியான தூக்கமின்றி விடிந்தபிறகு தான் கண்விழித்த இருளப்பக் கோனார் திடுக்கிட்டு விழித்தெழுந்து மணியின் கட்டிலருகே வந்தார். கோனாரைக் கண்டதும், மணி தன் படுக்கையை விட்டு எழுந்திருக்க முயன்றான்.

"தம்பி தம்பி, எந்திரிக்கக் கூடாது, படுத்தே இரிங்க" என்று கூறியவாறு அவனை எழவிடாமல் தடுத்து நிறுத்திப் படுக்க வைத்தார், மணியைப் பார்த்ததும், இருளப்பக் கோளாருக்குக் கண்கள் இரண்டும் கலங்கிச் சிவந்தன. என்ன பேசுவது என்று தெரியாமல் அவரது உதடுகள் உணர்ச்சி வசப்பட்டுத் துடித்தன; வயோதிகம் புகுந்துவிட்ட அவரது மெலிந்தவுடல் முளைக்கீரைத் தண்டு போல் நடுங்கியது.

"கோனாரே " மணியின் குரல் கரகரத்தது; அவன் கரைகளில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.