பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224


சங்கரின் மனத்தில் அந்த வீரனின் தணியாத தேச பத்தியும் வீரமும் அழியாத இடம் பெற்றன.

"அந்த வீரனைப்போல், நானும் வாழ்ந்தால்? அதைவிட மனிதனுக்கு வேறென்ன வட்சியம் வேண்டும்” சங்கரின் மனம் அந்த வீரனைத் தன் லட்சிய புருஷனாக ஸ்வீகரித்தது. ஆனால் அதே நேரத்தில், அவன் மனம் காணாமற் போன மணியைப் பற்றியும் சிந்தித்தது:

'சே! மணி என்ன இப்படி ஓடிப்போய் விட்டான்! எதிர்பாராது நேர்ந்த துர்ச்சம்பவங்கள் தாம். எனினும் இப்படியா மனம் ஒடிந்து போவது? தந்தையும் தம்பியும் இறந்து விட்டால் என்ன? தாய் இருக்கிறாளே! தாயைத் தவிக்க விட்டு விட்டா ஒடுவான்? தூ! கோழை!'

சங்கரின் மனத்தில் அந்த எண்ணத்தால், மணியின் மீது திடீரென்று அசூ யையும் அருவருப்புணர்ச்சியும் மேலோங்கின.எனினும் மறுகணமே அவன் எல்லோருக்கும் தைரியம் லகுவில் வந்துவிடுமா?' என்று எண்ணியவனாக, மணியின் நிலைமைக்காகப் பரிதாப உணர்ச்சியும் கொண்டான்.

மணியையும் அவன் தாயையும் பற்றிச் சிந்தித்தவாறே வந்த சங்கரை, அவன் கால்கள் அவனையுமறியாமல் இருளப்பக் கோனாரின் குடிசைக்கு இழுத்துச் சென்றன. இருளப்ப கோனாரின் குடிசை இருள் மண்டிக் கிடந்தது. மாடக் குழியிலிருந்த தகர விளக்கு மின்மினிப் பூச்சிபோல் ஒளிசிந்தித் தவித்துக் கொண்டிருந்தது; இருட்டில் குடிசை மூலையில் கிடக்கும் ஆட்டுரலில் மாரி பருத்திவிதை ஆட்டும் சத்தம் இருளின் அமைதியிலே கடலலைபோல் கும்மென்று ஒலித்தது.

குடிசையின் வெளியே நின்றவாறே சங்கர் குரல் கொடுத்தான்.

"கோனார்!கோனார்!"

ஆட்டுரல் ஆட்டும் சப்தம் நின்றது.