பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236


பெரிசாப் போச்சி, நீயாவது அவளிடம் சொல்லக் கூடாதா?" என்று கூறிக் கொண்டே சாதத்தைப் பரிமாறினாள் தர்மாம்பாள்.

சாப்பிட்டு முடிந்ததும், சங்கர் மாடிக்குச் சென்று தன் அறையில் விளக்கேற்றிவிட்டு, மேஜைமீது கிடந்த பத்திரிகையை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.

அந்தப் பத்திரிகையில் கோவை ஜில்லாவில் நிலவி வரும் பஞ்சு நிலைமை பற்றிய விவரங்கள் வெளியாகி பிருந்தா, ஒட்டி உலர்ந்த வயிற்றோடு, பெற்ற குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்கக்கூட வகையற்றுத் தவிக்கும் ஒரு ஏழைப் பெண்ணின் பரிதாபகரமான சித்திரமும் அதில் வெளியாகியிருந்தது. மக்கள் புளியம் விதையையும், கற்றாழைக் கிழங்கையும் தின்று உயிர் பிழைத்தார்கள்; அதுவும்கூடக்கிடைக்காமல் பலர்பட்டினி கிடந்தார்கள்; கண்ட கண்ட கிழங்குகளையும் பூண்டு களையும் தின்று அஜீரணம் கண்டு செத்தார்கள்; பெண்களின் கற்புக்கு விலை மலிந்து விட்டது; பிள்ளைகளின் விலை சரசமாயிற்று; பட்டினிச் சாவு அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது; ஒரு வேளை அன்னம் பட்டும் குதிரைக் கொம்பாய் விட்டது...

சங்கர் அந்தச் செய்திகளைக் கூர்ந்து படிக்க நினைத் தான் எனினும் அவன் மனம் வேறுபலசிந்தனைகளை வலிய இழுத்துக் குவித்தது. அந்தச் சிந்தனைகளிலிருந்து மீள முடியாமல், பத்திரிகையை மூடி வைத்துவிட்டு விளக்கை அனைத்தான்; அப்படியே நாற்காலியில் சாய்ந்து படுத்தவாறு, சிந்தனையைத் தன்னிச்சையாகத் திரிய விட்டான்.

மணி அவன் ஒரு கோழை! வாழ்க்கையில் துன்பாங்கள் நேரும்போது அதன் காரண காரியத்தை அறிந்து அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். அதை விட்டுவிட்டு, பயந்தாங்கொள்ளி போல ஓடிவிட்டான்!