பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268


ஊர்களிலிருந்து சென்னைக்கு நெசவாளர்கள் புறப்பட்டுச் செல்கிறார்களல்லவா? - அதுபோல், நமது ஊர்ப் பக்கமிருந்தும் நெசவாளர்கள் புறப்பட்டு வருகிறார்கள். சீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை முதலிய ஊர்ளிலிருந்து நெசவாளர் பட்டினிப் பட்டாளம் புறப்பட்டு வருகிறது. அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஆதரவு திரட்டி வழியனுப்பி வைக்க வேண்டாமா? இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் இங்கு வந்து விடுவார்கள். அதற்குள் நாம் சகல ஏற்பாடுகளும் செய்யவேண்டும். சரி, தூங்குங்கள்; விடிந்ததும் யோசிப்போம்" என்று கூறிவிட்டு, உள்ளே படுக்கச் சென்றார் ராஜு.

பட்டினிப் பட்டாளம்.

மணியின் மனத்தில் அந்த ஒரு விஷயம் மட்டும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

‘மக்கள் தங்கள் பட்டினியை, ஊரழிய, உலகறியப் பறைசாற்றிக் கொண்டு பட்டாளமாகத் திரண்டு வருவதென்றால், அவர்கள் நிலைமை எவ்வளவு மோசமாக போயிருக்க வேண்டும்? பட்டாளமாகத் திரண்டு தங்கள் பட்டினிக்கு விமோசனம் தேட முன்வரும் அந்த மக்களுக்குத் தான் என்ன நம்பிக்கை என்ன உறுதி'

மணி அந்தப் பட்டாளத்தினரை அப்போதே பார்த்து விட வேண்டும் என்று எண்ணினான். அந்தப் பட்டாளத்தினரை விரைவில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் அவன் இதயத்தில் மிஞ்சி வளர்ந்தது.

'பட்டினிப் பட்டாளம், பட்டினிப் பட்டாளம்_'

மணி அதே நினைவாகத் தன் கண்களை மூடினான்; அன்றிரவு அவனுக்கு நிம்மதியான தூக்கமே கிட்டவில்லை.