பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270


போல் பொழிந்து கொண்டிருந்த அந்தக் கார்த்திகை மாச இரவில் கொட்டும் பனியையும் ஊதைக் குளிரையும் பொருட்படுத்தாது, மணி அந்த விளம்பரப் போர்டுகளில் பலவற்றைத் தானே சுமந்து சென்று பல இடங்களில் தொங்கவிட்டான்; போஸ்டர்கள் ஒட்டினான்; அத்தனை குளிரிலும் அவன் உள்ளம் மட்டும் பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்கும் உற்சாகத்தில் குதுகுதுத்துப் பொங்கி, அவன் உடம்பில் வெது வெதுப்பையும் விறுவிறுப்பையும் ஊட்டிக்கொண்டிருந்தது.

விளம்பரத்தோடு மட்டுமல்லாமல், மணி பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்கும் பணியில் ஈடுபடுமாறு மக்களிடையே பிரசாரம் செய்து வந்தான்; நெசவாளர்களையும், மற்றும் பல ஜனநாயகவாதிகளையும் சந்தித்து அவர்கள் ஆதரவைத் திரட்டினான்; சகோதரத் தொழிற் சங்கங்களையும், வாலிபர் சங்கங்களையும், வாசகசாலை களையும், அரசியல் கட்சிகளையும் அந்த வரவேற்பில் ஈடுபடச்செய்வதற்காக, அவற்றின் நிர்வாகிகளைச் சந்தித்து. அவர்கள் ஆதரவைப் பெற்றான்; அத்துடன் படை திரண்டு வரும் நெசவாளிகளுக்கு, அவர்கள் மதுரையில் தங்கும் காலத்தில், உணவு கொடுத்து உபசரிப்பதற்காக, உண்டியல் எடுத்துக் கடைகடையாகத் தெருத்தெருவாகச் சென்று நிதி பிரித்தான்; அரிசி, காய்கறி, மற்றும் உணவுப் பொருள்களையும் நன்கொடையாகச் சேகரித்தான். பட்டினிப் பட்டாளத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முறையில் அன்று மதுரை நெசவாளர் சங்கத்தின் ஆதரவில் ஒரு மாபெரும் ஊர்வலம் நடத்துவதற்கும், அவர்களது கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அன்று மாலை ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் ஏற்பாடுசெய்திருந்தான். அந்த இரண்டு நாட்களிலும் அவன் பம்பரமாகத்தான் சுழன்றுவேலை செய்தான். நெசவாளர்களின் போராட்டத்துக்காக, மக்களின் ஆதரவைத் திரட்டும் ஒவ்வொரு நிமிஷத்தையும் அவன் பொன் போல் பயன்படுத்தினான்.