பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291


களுக்கோ வள்ளிசாக நூலே கிடைக்கவில்லை. மலிந்த ரக நூல்களை வாங்கி நெய்து பிழைத்து வந்த நெசவாளிகளுக்கோ, பத்து நாட்களுக்குப் போதுமான வருமானம் கூடக் கிடைக்கவில்லை. நிலைமை சீர் திருந்துகிற வரையிலும் எப்படியாவது, வாயை வயிற்றைக் கட்டியாவது, காலம் தள்ளிவிடலாம் என்று எண்ணியிருந்தவர்கள் எண்ணத்திலும் மண் விழுந்துவிட்டது. தறித்தொழில் முடக்கப்பட்டவுடன், பலர் வேறு சில்லறைத் தொழில்களைத் தேடியலைந்தார்கள்; மணிமுத்தாறு அணைக்கட்டு வேலையில் கூலி வேலை தேடிப் பல பேர் சென்றார்கள்; சென்றவர்களில் முக்காலே மூன்று வீசம் பேர் வேலை கிடைக்காது திரும்பி வந்தார்கள். ஒரு சிலர் இருக்கின்ற சொத்து பத்துக்களையெல்லாம் விற்றுக் காசாக்கிக் கொண்டு, பட்டணக் கரைகளுக்குப் பிழைப்புத் தேடிச் சென்றார்கள்; சிலர் மரியாதையோடும் மானத்தோடும் பிறந்து வளர்ந்து ஜீவித்த மண்ணில், பட்டினி கிடந்து செத்து அபக்கியாதியடைவதை விட எங்கேனும் அயலூருக்குச் சென்றாவது சாகலாம் என்று பயணப்பட்டார்கள்.

ஆனால், அதே சமயத்தில் வேறு பல நெசவாளிகள் என்ன கஷ்டங்கள் நேர்ந்தபோதிலும் பிறந்த மண்ணையும், செய்த தொழிலையும் விட்டுப் பிரிவதில்லை என்ற வைராக்கிய சித்தத்தோடு, நெசவாளர் சங்கத்தில் ஒன்றுபட்டு நின்று தங்கள் உரிமைகளுக்காகப் போராட முன் வந்தார்கள்; சங்கத்தின் மூலம் தங்கள் கண்டங்களுக்கு நிவாரணம் தேட முடியும் என்ற நம்பிக்கைக்கு ஆளானார்கள்; தங்கள் கஷ்டங்களின் காரணகாரியத் தொடர்பைப் புரிந்து கொண்டு, தங்கள் தலை விதியைத் தாமே நிர்ணயிக்க முன் வந்தார்கள்.

சுருங்கச் சொன்னால் அவர்கள் அனைவரையும் பல்வேறு கஷ்ட நஷ்டங்கள் நெருப்பைப் போல் சுட்டுத் தகித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு புறத்திலோ அந்த நெருப்பின் தகிப்பைத் தாங்கி நிற்க முடியாமல் சிலர் நீறாகி,