பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


"வாங்க அத்தான்" என்று அன்புடன் வரவேற்றாள் கமலா.

"ஏது, ரயில்வே ஸ்டேஷனில்கூடப் படிப்புத்தானா?" என்று புன்னகையோடு கேட்டுக்கொண்டே எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்தான் அந்தவாலிபன்.

"இது பாடப்புத்தகமில்லை அத்தான். இது 'சோஷிய லிலமும் பெண்களும்' என்ற புத்தகம். அண்ணா வாங்கிக் கொடுத்தான்" என்று மணிக்குரலில் பதிலளித்தாள் கமலா.

"யார் சங்கரா வாங்கிக்கொடுத்தான்? ஏதேது? அவன் உன்னையும் தன் கட்சிக்கு இழுக்கத்தொடங்கிவிட்டானா?" என்று மெல்லிய சிரிப்போடு கேட்டான் அவன்.

கமலாபதிலுக்குலேசாகச் சிரித்துவிட்டு, புத்தகத்தில் கண்ணைத் திருப்பினாள். அந்த வாலிபனும் தாலும் ஏதோ படிக்கப் போவதுபோல் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.

மணி என்ற அந்த வாலிபனுக்குச் சுமார் இருபத்தி மூன்று வயதிருக்கும். அவன் அம்பாசமுத்திரத்திலுள்ள ஜவுளி நூல் வியாபாரியான கைலாச முதலியாரின் தலைப் புதல்வன். சுருள் சுருளாகத் திரண்டிருக்கும் அவனது கரிய தலையிரும் வாய் நிறைந்து சிரிப்புக் களையும் அவனுக்கு ஒரு தனி வசீகரத்தைத் தந்து கொண்டிருந்தன. மணி திருநெல்வேலியில் ஜுனியர் பி.ஏ. படித்துக் கொண் டிருந்தான்.கமலாவுக்கு எதிரே அமர்ந்திருந்த மணிதானும் ஏதோவாசிக்கப்போவதாகப் பாசாங்கு செய்தானே ஒழிய, உண்மையில் அவனது பார்வையெல்லாம் அந்தி ஓளியின் மஞ்சள் பிரவாகத்தில் சொர்ணச்சிலாவடிவம் போல் அழகு கொழித்து விளங்கும் கமலாவின் மீதே பதிந்திருந்தது. அந்த அழகின் சோபையை வார்த்தைகளில் வடித்திறக்கி உருக் கொடுக்கத் தான் ஒரு கவியாக இல்லையே என்று அவனது ஊமை மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. மணி வந்த பிறகு கமலாவுக்குப் புத்தகத்தில் நாட்டம் நிலைக்கவில்லை.