பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305


அருகில் நின்ற ராஜு "அப்பா!" என்று கம்மியடைத்த குரலில் அழைத்தான். 'அப்பா!' பத்து வருஷங்களாகக் கேட்காத குரல், கேட்பதற்காகத் தவித்துக் கொண்டிருந்த குரல் காதில் விழுந்ததும் இருளப்பக் கோனாரின் உடம்பில் ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஆட்சிக்குக் கட்டுப்படாத ஜீவரசம் ததும்பி ஒடுவது மாதிரித் தோன்றியது.

"வீரையாவா அவர் குரல் இத்தனை நாளும் பூத்துக் கிடந்த பாசத்தையும் ஆர்வத்தையும் விசிறிக் கொண்டு பிறந்தது.

மணி அவருக்குச் சகலவிஷயங்களையும் சுருக்கமாகச் சொன்னான்.

கூட்டம் முடியும் வரையிலும் இருளப்பக் கோனார் நிலை கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். யுகாந்திர காலமாக, ஊழுழி காலமாகக்கூட்டம் முடிவற்று நடந்து கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. ஒவ்வொரு விநாடியும் மார்க்கண்டேயன் போல் மரணமோ மாற்றமோ இன்றி ஸ்தம்பித்து நிலைபெற்று நிற்பதுபோல் அவருக்குத் தோன்றியது.

அவர் பூமியிலே கால் தரிக்காமல் புழுங்கிக் கொண்டிருந்தார்; அவர் மனத்தில் தோன்றிய எல்லையற்ற குதூகலம் அவரது நரம்புக்கால்களிலெல்லாம் இன்ப ஜுர வேகத்தை ஏற்றுவது போலிருந்தது. அந்தக் குதுகுதுப்பில் அவர். மகிழ்ந்தார். வேதனையடைந்தார். சிரித்தார்; கண்ணீர் சிந்தினார்; பேசினார்; ஊமையானார்....

கூட்டம் முடிந்தவுடனேயே கோனார் தம் மகன் வீரையாவையும் மணியையும் விடாப்பிடியாய்க் குடிசைக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். வடிவேலு முதலியாரும் பிற நெசவாளிகளும் தங்கள் தலைவர்களுக்குச் சாப்பாடு பண்ணி வைத்துவிட்டு, தாமே அழைத்து வருவதாகச் சொல்லியும், கோனார் ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்க விரும்பவில்லை. கடைசியில் மணியும் ராஜுவும்