பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


சங்கர் மெல்லச் சிரித்தான்; பிறகு ஆறுதலாகப் பேசத் தொடங்கினான்.

"இந்தா பாரு, கமலா எத்தனை எத்தனையோ தலைமுறைகளாக வேரோடி நிலைத்து வந்திருக்கும் மனப்பான்மையை ஒரு நாள் பேச்சில் பிடுங்கி எறிந்துவிட முடியுமா? உங்கள் பிரின்ஸிபால் கண்டித்ததில் ஆச்சரியப் பாடுவதற்கே ஒன்றுமில்லை. அவளும் அந்தப் பரம்பரையின் பிரதிநிதிதானே? ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். உன் மனத்துக்குச் சரியென்று படுவதை மட்டும் என்றும் துணிந்து சொல்வதற்குப் பயப்படாதே"

"அடேடே? உங்க காலேஜிலே 'டிபேட்' இருந்ததா? என்னிடம்கூட நீ அதைச் சொல்லவில்லையே!" என்று குறுக்கிட்டுக் கேட்டான் மணி.

கமலா பதில் பேசாமல் மெல்லச் சிரித்தவாறே தலைகுனிந்தாள்.

இதற்குள் ரயில் சேர்மாதேவி ஸ்டேஷனில் வந்து நின்ற து.

ரயில் நின்றதும் சங்கர் தலையை நீட்டி வெளியே பார்த்தான். ரயிலிலிருந்து ஆட்கள் இறங்கவும் ஏறவுமாக இருந்தார்கள். திடீரென்று சங்கர் யாரையோ இனம் கண்டு கொண்டு, டாக்டர்ஸார்" என்றுகூப்பிட்டான்.

சங்கரின் குரல் கேட்டுத் திரும்பிய மனிதர் புன்னகை ததும்பும் முகத்தோடு சங்கர் இருந்த வண்டிக்குள் ஏறினார். சங்கர் அவருக்கு இடம் கொடுத்துச் சிறிது விலகி அமர்ந்து கொண்டான். கோட்டும் ஷூட்டும் அணிந்திருந்த அந்த வாலிப வயதுள்ள மனிதர் "என்ன மிஸ்டர் சங்கர். எங்கே? காலேஜிலிருந்தா?" என்று கேட்டுக்கொண்டே இடத்தில் அமர்ந்தார்.

"ஆமாம் டாக்டர், நீங்கள் எங்கே இப்படி.?" என்று விசாரித்தான் சங்கர்.