பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


போட்டிருந்தகாதை அறுத்து ஒட்டி, கால்துட்டு அகலத்தில் கம்மலும் போட்டுக் கொண்டாள், ஏதோ தன் மகன் மணிக்குக் காலாகாலத்தில் ஒரு கலியாணத்தைப் பண்ணி வைத்து விட்டால், மருமகளை ஆட்சி செலுத்திக் கொண்டு தான் நிம்மதியாக இருக்கலாம் என்ற நிரந்தர நப்பாசையும் அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது. வியாபாரி என்ற அந்தஸ்துக்கு வந்துவிட்டதால், கைலாச முதலியாரும் தமது மூத்த மகன் சுப்பிரமணியன் என்ற மணியை இங்கிலீஷ் படிப்புப் படிக்க வைத்து, பிஏ. கிளாஸ் வரையிலும் தள்ளி விட்டுவிட்டார். கைலாச முதலியார் தம் சம்பாத்தியத்தில் பெருமளவை வீட்டிலும் வயலிலும் வியாபாரத்திலும் போட்டு விட்டதால், அவரிடம் ரொக்கமாக அப்படி ஒன்றும் அதிகம் மிஞ்சிவிடவில்லை.எனவே வியாபாரத்தில் அடிக்கடி ஏற்படும் தேவைகளுக்கு தாதுலிங்க முதலியாரிடமும், மைனர் முதலியாரிடமும், வேறு சிலரிடமும் அவ்வப்போது ரொக்க லேவாதேவி செய்து, வாங்குவதும் அடைப்பதுமாக வியாபாரத்தை ஓட்டி வந்தார்.

கைலாச முதலியார் எந்தக் காலத்திலும் பாவ புண்ணியத்துக்கும் தெய்வத்துக்கும் அஞ்சி நடந்து வந்தார். திருச்செந்தூர் முருகப் பெருமான் மீது அவருக்குக் கரைகடந்த பக்தி. அவரது முருகப் பக்தியின் சாட்சியமாக அவர் தமது மூத்தமகனுக்கு சுப்பிரமணியம் என்று பெயரிட்டது போலவே தமது இரண்டாவது புத்திரனுக்கும் ஆறுமுகம் என்று பெயர் வைத்திருந்தார். ஆறுமுகத்துக்குப் பத்து வயதிருக்கும். கைலாச முதலியார் முருகனை நினைக்காத நேரமே கிடையாது. பட்டறைப் பலகையில் அமரும்போதும், சாப்பாட்டுக்கு இலைமுன் உட்காரும் போதும், அலுத்துப் போய்க் கொட்டாவி விடும்போதும், தூங்கி எழுந்திருக்கும் போதும் அவர் முருகன் பெயரை வாய்விட்டுச் சொல்லி வணங்க மறப்பதில்லை. அவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் தொங்கிக் கொண்டிருக்கும் முருகக் கடவுளின் ஆறுபடை வீட்டுப் படங்களும், பிற திருவுருவப் படங்களும் அவரது தெய்வ பக்தியைப் பறை