பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


செம்மண் சரல்பாதை வந்து முடியும் வெளிவாசலில் ஈயமுலாம் பூசப்பட்ட அழகிய பூவேலைப்பாடு கொண்ட இரும்புக் கிராதி கேட்; கேட்டுக்கு இருமருங்கிலும் உள்ள சுவர்களில் இரண்டு பித்தளைத் தகடுகள் பதிக்கப் பட்டிருந்தன. பளபளவென்று மின்னும் அந்தத் தகடுகள் ஒன்றில் 'ராவ் சாகிப் தாதுலிங்க முதலியார்' என்றும் மற்றொன்றில் 'மங்கள் பவனம்' என்றும் விலாசங்கள் காணப்பட்டன. இரண்டாவது உலக யுத்த காலத்தில் தாதுலிங்க முதலியார் யுத்த நிதி, தேசியப் பாதுகாப்பு நிதி முதலியனவற்றுக்கு, ராஜ விசுவாசத்தோடு உதவி ஒத்துழைத்தகாரணத்தால், அப்போதைய மேன்மைதங்கிய வெள்ளைக்கவர்னர் பெருமான் உவந்தளித்த புது வருஷம் பட்டம்தான் அந்த 'ராவ்சாகிப்' எனினும், இந்திய தேசியத் தலைவர்களின் கையில் ஆட்சி மாறிய காலக் கட்டத்தில், நமது நாட்டில் எத்தனையோ பெரிய மனிதர்கள் தாம் அன்னியராட்சியில் பெற்றிருந்த பட்டங்களையும் விருதுகளையும், உதறித் தள்ளி, தமது 'தேச பக்தி' விசுவாசத்தையும் 'தியாக'புத்தியையும் விளம்பரப்படுத்திக் கொண்டது போலவே, தாதுலிங்க முதலியாரும் யுத்தப் பிற்காலத்தில் அந்தப் பட்டத்தைத் திரஸ்கரித்து விட்டார் எனினும் அந்தப் பித்தளை போர்டில் மட்டும் அந்தப் பட்டம் அழிக்கப்படவில்லை, அது அழிக்கப் பெறாமல் இருந்ததும் ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று.

'ஒரு காலத்தில் ஸ்ரீமான் தாதுலிங்க முதலியார் ஒரு ராவ் சாகிப்பாக இருந்து, பின்னர் தேச பக்தியின் காரணமாக, அதைத் திரஸ்கரித்தவராக்கும்!' என்ற வெள்ளிடை மலை உண்மையை, அவரது தியாகத்தை, அவருக்கும் பிறருக்கும், காண்கிற வேளையெல்லாம் நினைவூட்டிக் கொண்டிருக்கும் சின்னமாக, சாட்சியமாக அந்தப் போர்டு இலங்கி வந்தது.

தாதுலிங்க முதலியார் அம்பாசமுத்திரத்திலுள்ள பரம்பரைப் பணக்காரர்களில் ஒருவர், பரம்பரைப்