பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


இருளப்பக் கோனார் "வாங்க தம்பி" என்று சங்கரை வரவேற்றார்.

"என்னப்பா மணி, என்ன புறப்பாடு ஆச்சா?" என்ற கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான் சங்கர்.

சிறிது நேரத்தில் மணி, சங்கர், கமலா மூவரும் புறப்பட்டு வெளியே வந்தார்கள்.மணியின் தம்பி ஆறுமுகம் தன் தாயிடம் போய் ஒட்டிக்கொண்டு, "அம்மா, நானும் போறேன்!"என்று அழாக்குறையாகக் கெஞ்சினான்.

"நம்ம எல்லாம் இன்னொருநாள் போவோண்டா" என்று அவனை ஏமாற்றினாள் தாய்.

வெளியே வந்த சங்கர், இருளப்பக்கோனாரைப் பார்த்து "என்ன கோனாரே, வாங்களேன். எஸ்டேட்பக்கம் போய் விட்டு வரலாம். எங்களுக்கும் துணை ஆச்சு" என்று அன்போடு கூப்பிட்டான்.

"கொல்லன் பட்டறையிலே ஈக்கு என்ன வேலை, தம்பி? நீங்க போயிட்டு வாங்க" என்று பதில் சொன்னார் இருளப்பக் கோனார். அவரது குரல் ஏனோ அடைபட்டுப் போன மாதிரி இருந்தது.

"அவர் வரமாட்டார்" என்று அர்த்த பாவத்தோடு - ஆங்கிலத்தில் சொன்னான் மணி,

"ஏன்?" என்று பதிலுக்கு ஆங்கிலத்தில் கேட்டான் சங்கர்.

அதற்கு மணிஎதுவும்பதில் சொல்லவில்லை.

"புறப்படலாமே"என்றுதான் மணி சொன்னான்.

மூவரும்காரில் சென்றுஏறி அமர்ந்தார்கள்.

இருளப்பக் கோனாரும், தங்கம்மாளும் அந்தச் 'சின்னஞ் சிறுசுகள் 'குதூகலத்தோடு சென்று அமருவதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.