பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61



"அப்படிச் சொல்லுங்க, அண்ணாச்சி, நாம இல்லாமெ, இவங்க மட்டும் எப்படிச் சம்பாதிச்சாங்க? அன்னிக்கி, எம் மச்சினன் மதுரையிலேயிருந்து வந்திருந்தானே, அவன் சொன்னான். மதுரையிலே நெசவாளிகள்ளாம் சங்கம் வச்சி, ஒண்ணு சேர்ந்து ஒத்துமையா இருக்கதினாலே, எந்த முதலாளியும் தறிகாரர்கிட்டே, அப்படி இப்படி வாய்த்துடுக்காய்ப் பேசவே பயப்படுதானாம். நாமும் அந்தமாதிரிச் சங்கம் கிங்கம் வச்சி ஒண்ணு சேர்ந்தாத்தான் நமக்கும் விமோசனம்" என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார் ஒரு நெசவாளி.

"சரி சரி, பேச்சைக் சுருக்குங்க, அந்தக் கோள்மூட்டி சுப்பையா எதிரே வாரான். அவன் காதிலே எதுவும் விழுந்து தொலையப் போவுது" என்று எச்சரிக்கை செய்தார் வடிவேலு.

வடிவேலுவின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்ட நெசவாளிகள் அங்கிருந்தவாறே தத்தம் வழியில் பிரிந்து சென்றனர். வடிவேலு முதலியாரும் சிறிது நேரம் அங்கேயே நின்று, 'வீட்டுக்குச்செல்வதா,கைலாசம் அண்ணாச்சியைப் பார்ப்பதா, அல்லது மூப்பனார் கடைக்குப் போவதா' என்று விசாரத்தில் ஈடுபட்டுவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய்த் தெற்கே திரும்பினார்.

7

கைலாசமுதலியார் கோயில் தர்மகர்த்தாவானபிறகு லோகநாயகி அம்மனுக்குயோககாலம் தொடங்கிவிட்டது.

ஏனெனில், மைனர் முதலியார்வாளின் காலத்தில் அம்மனுடைய நிலைமை பரிதாபகரமாயிருந்தது. அந்தக்காலத்தில், லோகநாயகி என்று அருமையான பெயர் படைத்த அந்தக்காவல் தெய்வத்துக்குக்கட்டிக்கொள்ள ஒரு நல்ல துணிகூடக் கிடையாது. உடுத்திய துணியைத் தவிர வேறு மாற்றுத் துணிக்குக்கூட அவளுக்கு விதியில்லை.