பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூனைக்கு இடம் கொடுத்து மாண்ட கழுகு

105

வனுடைய கடமை என்று தர்ம சாத்திரம் படித்தவர்கள் எல்லோரும் சொல்லுவார்கள். உம்மிடம் அறங்கேட்க வந்த என்னை நீர் கொல்ல நினைத்து விட்டீர். இது சரியா? பகைவர்களும் கூடத் தம்மை அடுத்தவர்களுக்கு நன்மையே செய்வார்கள். பகை கொண்டு தன்னை வெட்ட வருபவனுக்கும் மரம் நிழல் கொடுத்துக் களைப்பாற்றும். நிலவு தீயவன் வீட்டிற்கும் வெளிச்சம் கொடுக்கிறது. பெரியவர்கள், புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உபகாரம் செய்வார்கள். எவனொருவன் வீட்டிற்கு, ஒரு விருந்தாளி வந்து முகம் வாடித் திரும்புகிறானோ, அவன் வீட்டுப் புண்ணியத்தை எடுத்துக் கொண்டு தன் பாவத்தை அங்கே விட்டு விட்டுச் செல்லுகிறான் அந்த விருந்தாளி என்று சொல்லுவார்கள்.’’ என்று பூனை சொல்லிக்கொண்டிருந்தது.

'ஆனால், இறைச்சி அருந்துவதும் அதற்காக உயிர்களைக் கொல்லுவதும் உங்கள் குலத்துக்குரிய குணம் அல்லவா?’ என்று கிழட்டுக் கழுகு கேட்டது.

'சிவ சிவா! என்ன தீயவுரை! பஞ்சமா பாதகத்தில் பெரிய பாவம், கொலைப் பாவம். அப்பாவம் செய்பவர்கள் தீய நரகம் அடைவார்கள். அற நூல்கள் பல அறிந்துள்ள நான், இத்தீய கொலைத் தொழிலை விட்டுவிட்டேன். நல்ல பழவகைகளை உண்டு வாழ்கின்றவர்கள், பாவச் செயல் செய்யப்

ப–7