பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பஞ்ச தந்திரக் கதைகள்

தன் மத்தகத்தைக் கொத்துவதற்குத் தானே பாகனிடம் அங்குசத்தை எடுத்துக் கொடுத்ததுபோல், இந்த மாட்டையும் சிங்கத்தையும் நட்புக் கூட்டி வைத்து நமக்கு நாமே கேடு செய்து கொண்டோம். தங்களால் தாங்களே கெட்ட மூன்று பேருடைய கதைபோல் இருக்கிறது நமது கதையும்' என்று வருத்தத்துடன் கூறியது.

'இப்போது நாம் என்ன செய்வது?’ என்று இரண்டாவது நரி கேட்டது.

‘கவலைப்படாதே, சூழ்ச்சியாக அவ்விருவருடைய நட்பையும் குலைத்து விடுவோம். பிறகு நாம் இந்தக் காட்டையே நம் கைவசப்படுத்திக் கொள்ளலாம்' என்று உறுதியுடன் பேசியது முதல் நரி. மேலும் அது தொடர்ந்து, ‘எப்படியோ கைவிட்டுப் போனதை மீண்டும் கைகூடச் செய்வதும், இடையூறுகள் வராமல், தடுத்துக் கொள்வதும், முயற்சியினால் அருமையான செல்வத்தைத் தேடி அடைவதும், எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து செய்வதும் ஆகிய காரியங்களில் வல்லவன் தான் சரியான அமைச்சன்’ என்றது.

‘இவ்வளவு நெருங்கிய நட்பாய் இருக்கும் சிங்கத்தையும், எருதையும் நம்மால் பிரிக்கமுடியுமா? இது ஆகிற காரியமா?’ என்று கேட்டது இரண்டா வது நரி.