பக்கம்:படித்தவள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
படித்தவள்
69
 


“எப்படிக் கலியாணம் ஏற்பாடு ஆயிற்று? முன்பின் உறவா?”

“காதல் கலியாணம்” என்றான்.

அதைத் தெரிந்துகொள்ள ஆவேசம் ஏற்பட்டது.

“எப்படி?” என்றேன்.

“என் பையன் தவறாமல் எந்தப் படம் வந்தாலும் முதல் காட்சிக்குப் போவான்; முட்டி முரண்டி எப்படியாவது போய்ப்பார்த்து விட்டு வருவான்; அன்று டிக்கட்டு கிடைக்கவில்லை. தன் ஆர்வமும் முனைப்பும் களத்தில் போட்டுவிட்டு வெறுங்கையானாக வீடு திரும்புகிறான்; அப்பொழுது இந்தப் பெண் தான் வாங்கி வைத்த டிக்கட்டை அவனுக்குத் தந்து ‘போய் வா வீரனே’ என்று அனுப்பி வைத்தாள். காலத்தால் செய்த உதவி என்பதால் அவளை மறக்கவில்லை. அவளையே அவன் தேர்ந்து எடுத்து விட்டான்”என்று சுருக்கமாகக் கூறினான்.

“அப்படித்தான் கூடும் கலியாணம் எல்லாம்; நாம் எதிர்பார்ப்பது போல் நடப்பதில்லை” என்று வேற்றுப் பொருள் வைப்பு வைத்துப் பேசினேன்.

“கலியாணத்துக்குக் கட்டாயம் வரவேண்டும்” என்றார்.

அந்த அனுபவம் எங்களைத் தீவிரப்படுத்தியது: அப்படியே விட்டு வைத்தால் இவன் யாராவது ஒருத்திக்கு டிக்கட்டு வாங்கிக்கொடுத்து உதவி செய்வான் என்று என் மகனைப்பற்றி அறிவிப்புத் தந்தாள் அவனைப் பெற்ற தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/71&oldid=1139535" இருந்து மீள்விக்கப்பட்டது