பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பெற்று அந்த மனுவை சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபையின் மூலம் சென்னை மாகாண கவர்னரிடம் கொடுத்தார்கள். (1:114)

மனுவைப் பெற்றுக் கொண்ட கவர்னர் அதை இங்கிலாந்திலுள்ள பேரரசருக்கும், இந்திய வைஸ்ராய் மிண்டோவிற்கும், இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கும் அனுப்பினார்.

இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்றது. அதற்கு சாதகமான பதில் கிடைப்பதாகத் தோன்றியது. இந்திய அரசுக்கும் - இங்கிலாந்து அரசுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகளில் இது தெரிந்தது. இந்த நல்ல செய்தி குறித்து 1908 மே மாதம் 13ம் தேதி தமிழனில் சுதேசி போலிகளை எதிர்த்து எழுதி, அவர்களது சுயராஜ்ஜிய கோரிக்கைகள் ஏற்கப்படாது என்றும், தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும் என்பதை விளக்கி

"அவர்கள் சீர்மையிலிருந்து விட்டிருக்கும் கவுன்சில் மெம்பர்கள் என்னும் (நீராஸ்திரமானது) யூரேஷியர்கள், மகமதியர்கள், நேட்டிவ் கிறிஸ்தவர்கள், சாதிபேதமில்லா திராவிடர்கள் இந்நான்கு கூட்டத்தாரை மனதையுங் குளிரவைத்து மறுபடியும் சீர்மைக்கு போயிருக்கிறது. அத்தகைய விவேகமிகுந்த நீராஸ்த்திரத்தால் குளிர்ந்துள்ள யூரேஷியர், மகமதியர், நேட்டிவ் கிறித்தவர், சாதி பேதமில்லா திராவிடர்களாகியப் பெருங் கூட்டத்தார் முன்பு உங்கள் அக்கினியாஸ்திரம் வீசுமோ, உங்கள் சுதேசியம் எனும் வார்த்தை நிலைக்குமோ ஒரு காலுமில்லை." (1:50)

பண்டிதரின் இந்த கருத்தின்படி, அன்றைக்கு சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை மூலம் கொடுத்த மனு மீதான விசாரணைகள் நம்பிக்கை யூட்டக் கூடியதாகவே இருந்தது.

இந்த சூழலில் சீர்த்திருத்த கருத்துக்களில் தாக்கம் பெற்று பரோடா அரசர் கெய்க்வாட் தம்முடைய சமஸ்தானத்தில் தீண்டத்தகாத மக்களில் படித்த மாணவர்களுக்கு உபகார சம்பளம், பணிகளில் சில ஒதுக்கீடு என்ற நடைமுறையை கொண்டு வந்தார். இந்த முயற்சியை பாராட்டி பண்டிதர் 1908, ஜூலை மாதம் 6ம் நாள் இதழில் கவிதையையும் ஒரு குறிப்பும் எழுதினார்.

எனவே பண்டிதர் தம்முடைய இடஒதுக்கீடு குறித்த கருத்தில் தெளிவாகவும், அதே நேரம் அக்கருத்துக்கு ஆதரவான சூழல் எங்கு நில வினாலும் அதை ஆதரிக்கவும் செய்தார். இக்காலகட்டத்தில் சமூக -

31 / பண்டிதரின்... சமூகநீதிக் கொள்கை