பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

றார்கள். கல்வியில் பி.ஏ. எம்.ஏ. முதலிய கெளரதா பட்டம் பெற்றுமிருக்கிறார்கள். இவர்களுக்குள் யாரையேனும் தெரிந்தெடுத்து கவுன்சில் மெம்பரில் சேர்த்து விடுவார்களாயின் அக்கூட்டத்தாருக்குள்ளக் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சுகம் பெறச் செய்வார்கள். ஆதலின் ஜைன சோதிரர்கள் உடனே வெளி வந்து தங்களுக்குள் ஒர் பிரதிநிதியை கவுன்சிலுக்கு அனுப்புவார்களென்று நம்புகிறோம் (l:219)

பண்டிதரின் திட்டத்தில் ஏறக்குறைய அனைத்து மதத்தவருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முழுமையடைந்தது. அவரது கருத்துக்களில் துல்லியத்தன்மை மிளிந்தாலும், அதை மேலும் மேலும் வளப்படுத்தினார்.

மிண்டோ - மார்லி திட்டம் வெளியாகி அதன்மீதான வாதப் பிரதி வாதங்கள் நடந்து வந்த நிலையில் 1910 ஜனவரி முதல் வாரத்தில் லாகூரில் காங்கிரசின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மீது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டது. காங்கிரசைப் பொருத்தவரையில் மிண்டோ - மார்லி திட்டத்தில் பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட்ட பிரிவினரைவிட முஸ்லீம்களுக்கு கொடுக்கப் பட்டதுதான் கண்டனத்திற்குள்ளானது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பெரிய ஒர் மதில் சுவரை பிரிட்டிஷ் அரசு எழுப்பி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் அவ்வாறு கவலைப் படுமளவிற்கு காங்கிரஸ் நேர்மையான அமைப்பா? என பண்டிதர் கருதினார்.

"கவுன்சிலர் நியமனத்தை இந்தியருக்கென்று பொதுவான உத்திரவு கொடுத்திருப்பார்களாயின் அந்தக் கவுன்சிலில் மகமதியர்களையே சேர்த்திருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

தற்காலம் சென்னை ராஜதானியில் சேர்த்திருக்கும் கவுன்சில் மெம்பர்கள் 47 பெயர்களில் மகமதியர்களை 23 பேர்களையேனும் சேர்த்துவிட்டார்களா? இல்லையே! 47 மெம்பர்களில் மகமதியர் இரண்டு பேரைத்தானே நியமித்திருக்கிறார்கள். இவ்விரண்டு பேர் நியமனத்தில் இவ்வளவு மனஞ்சகியாத காங்கிரஸ் கூட்டத்தார் இன்னும் 4 மகமதியர்களை சேர்த்துவிட்டால் என்ன கூச்சலிடு வார்களோ தெரியவில்லை. மகமதியர்க்கு மட்டும் 16 பெயருக்கு ஒருவரிருக்கிறாரென்று கணக்கெடுத்து பேசியவர் தாங்கள் எவ்வளவு பெயர் இருக்கிறோமென்று கணக்கெடுக்கவில்லை போலும்" (1:219-20)

கௌதம சன்னா / 58