பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 135 அம் மண்ணுக்கு உரியவன் ஆகிய இருவரின் செயல் முறைகளையுமே விளக்குகிறது என்ற தம் உட்கோளுக்கு ஏற்ப, இதை, வினைமேற் செல்வதன் முன் நிகழ்ச்சியாகக் கூறியுள்ளார். நாட்டின் எல்லை கடந்து அக நாட்டுள் புகுந்து விட்டது பகைப்படை என்ற செய்தி கேட்ட அளவே, எல்லை காக்க ஒல்லை செல்வது வேண்டு மாதலின், மண்ணுக்கு உரியான் அதற்கிடையில் விருந்து ஒம்புதல் போலும் விழாக்களை மேற்கொள்ளான்; மேற்கொள்வது முறையாகாது ஆதலின், இதைப் போர் மேற்செல்வதன் முன் நிகழ்ச்சியாகக் கொண்டால், இது மண்ணுக்கு உரியான் வினையாதல் இயலாது. மண்ணாசை கொண்டு, மாற்றான் நாட்டின் மீது போர் தொடுப்பவ னாயின், அது செய்வதன் முன்னர், அவ்வினைக்குப் பெருந் துணை புரிய வேண்டியவராகிய தன் படையாளர்க்கு விருந்து செய்து விழாக் காணல் போலும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு அவர்க்கு ஊக்கம் ஊட்டுவது பொருந்து மாதலின், அம்மன்னனுக்காயின், இது, போர் முன் வினையாதல் கூடும். மண்ணாசை கொண்டு வருவானின் படையாளர்க்கு, அவர்கள் போராற்றிக் கைப்பற்றக் கருதும் நாடு பிறந்த தாய் நாடு ஆகாது, பிறர் நாடு ஆதலின், அவர்க்கு அந்நாட்டின் மீது இயல்பான பற்றும் பாசமும் இருத்தற்கு இடம் இராது. ஆகவே, அந்நாட்டைக் கைப்பற்றும் அவாவும் வேட்கையும், அவர்க்கு ஊட்ட வேண்டுவது, அந்நாட்டின் மீது ஆசை கொண்ட அரசனுக்கு நீங்காக் கடமையாகி விடுதலின், அவன் அது குறித்துப் போர் மேற்செல்வதன் முன்னர்ப் பெருஞ்சோறு அளித்தல் போலும் விழா மேற்கொள்வது பொருந்தும் நிகழ்ச்சியாம். ஆனால், அம்மண் காக்க விரையும் வேந்தன்