பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 163 இயலாது. இவ்வாறு வினைசெய் காலமும், அது முடித்து வீடு திரும்பும் காலமும் ஒன்று ஆகாது. முன்னது வேனிற் பருவத்ததாகப் பின்னது கார்ப்பருவத்தது ஆகவே, நிழலும் நீரும் சார்ந்த கார்காலத்துக் காட்டகமே வினை நிகழ்ச்சிக்கு ஏற்புடையதாம் என்று கூறி, நிலமும், காலமும் கொண்டு, வஞ்சியை முல்லைப் புறமாகக் கோடல் பொருந்தாது. வஞ்சிப் போர், மண் ஆசை காரணமாக நிகழும் போர் ஆம். ஆகவே அப்போர் இரு நாடுகளின் எல்லைப் படைகளுக்கு இடையே நடைபெறுவதாகும். ஒரு நாட்டிற்கு இன்றியமையா அரண்களாகிய கடல் அரண், காட்டரண், மலையரண் ஆகியவற்றுள், கடல் அரணும், மலையரணும் எல்லா நாடுகளுக்கும் அமைதல் இயலாது. ஆனால், ஒவ்வொரு நாட்டையும் சூழக்காட்டரண் மட்டும் இயல்பாகவே அமைந்திருக்கும். இயற்கையான காடு அமையாதாயின், செயற்கைக் காட்டரணாவது அமைந் திருக்கும். "நொச்சிவேலித் தித்தன் உறந்தை” என்பது போலும் தொடர்கள், சங்க இலக்கியங்களில், நகரங் களோடு தொடர்புடையவாய் வழங்கப் பெறுகின்றன. ஆகவே, வஞ்சிப் போர், அக்காட்டகத்து நிகழும் போரே ஆகும். காடு முல்லை எனப்படும். ஆகவே வஞ்சி முல்லைப்புறம் ஆயிற்று. வெட்சிப்போர் புரியும் மறவரும் ஆயரும் முறையே பாலை, முல்லை நிலத்தவராகவும் அவர் அது காரணமாக நிகழ்த்தும் போர் குறிஞ்சி நிலத்திலாதல் கொண்டு, குறிஞ்சிப்புறமாக வெட்சியைக் கொண்டது போலவே, ஈண்டும் வஞ்சிப் போர் நிகழும் இடமாதல் கொண்டே முல்லைப் புறமாக வஞ்சியைக் கோடல் வேண்டும்; அதுவே இயற்கையோடு இயன்ற காரணம் ஆகும்.