பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 239 ஆனால், தும்பைப் போர் அத்தகையதன்று, தும்பைப்போர், தன் அண்டை அயல் நாட்டவரெல்லாம், தன் ஆண்மை ஆற்றல்களைக் கண்டு அஞ்சி அடிபணிதல் வேண்டும் என்ற ஆணவ உணர்வுடையனாகிப் போர் மேற்கொண்டு வருவானின் ஆண்மை ஆற்றல்களை அழித்து அடிமை கொண்டு அவனுக்கு நல்லறிவு புகட்ட மேற்கொள்ளும் போராதலின், வருவோனும் போர் நிகழ்ச்சியை ஒரு அளவே நிறுத்திக் கொள்வானல்லன்; அவன் மேல் செல்வோனும், ஒரு அளவோடு நிறுத்திக் கொள்வானல்லன்; மேலும் காட்டக் கூடியது ஒன்றும் இல்லை; தன் ஆண்மை அவ்வளவையும் காட்டி நிலை நாட்டியாயிற்று என்ற நிலை பிறக்குமளவு வருவோனும் போராடித் தீர்ப்பான்; ஆணவம் கொண்டு வந்தானின் ஆற்றல் ஆண்மைகளில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை; அனைத்தும் அழித்தாயிற்று என்ற நிலை பிறக்குமளவு அவன் மீது சென்றோனும் போராடித் தீர்ப்பன். அதனால் இருவர் தம் நாற்படைகள் அழிவுற்ற நிலையிலும் போர் ஓயாது; இருவர் தம் கைப்படைகள் அழிவுற்ற நிலையிலும்போர் ஓயாது; இருவர் தம் உடல் உறுப்புக்களில், ஒன்றோ பலவோ அற்று வீழ்ந்த நிலையிலும் போர் ஒய்ந்துவிடாது; ஆணவத்திற்கு அடிபணிந்துபோன உயிர், அவர் உடலை விட்டுப் பிரியும் வரையும், அவர்கள் போரிட்டுக் கொண்டேயிருப்பர்; ஒரோ வழி, அவர்கள் தலை வேறு உடல் வேறாக வீழ்ந்துவிட்ட நிலையிலும், ஆணவம் இருந்து ஆட்சி புரிந்த இடம் என்ற தொடர் புண்மையால், தலைதுள்ளுவதும், உடல் எழுந்து ஆடுவதும் உண்டு; அந்நிலை பிறக்கும்வரையும் போர் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.