பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 269 பொருள் ஈட்டும் கடனறி காளையாம் என்பதையும், இளையவள், காதலன் தன்னை விட்டு இமைப் பொழுதும் பிரியாது இருக்க வேண்டும் என்ற காமவெறியுடையவளாகி விடாது, "அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்” மனையற மாண்புகளாம்; "வினையே ஆடவர்க்கு உயிர்!” என இருவர் கடமைகளையும் உணர்ந்தவளாகி, பொருள் ஈட்டும் அத்தகைய வினைமேற் கொண்டு செல்லும் காதலன் இடைவழியில், தன் மேல் கொண்ட காதல் உணர்வு தூண்டக் கடமையைக் கைவிட்டு வறிதே வீடு திரும்பி விடாது, வினை முடித்து வருதல் வேண்டுமே என்ற உணர்வின் துடிப்பு மிகுதியால், பிரிவுத் துன்பத்தையும் தாங்கி உயிர் வாழும் பெரியோள் என்பதையும், உலகிற்கு உணர்த்தக் காரணமாக இருக்கும் பிரிவு ஒழுக்கத்திற்கு நிலைக்களமாகும் பாலைத் திணையும், சென்று போரிட வேண்டிய களம் காடும் மலையும் இடையிட்டு நனிசேய்த்து என இடத் தொலைவு கண்டோ, போரிட்டு வெல்ல வேண்டிய பகைப்படை, நெடு நல் யானையும், தேரும் மாவும் படையமை மறவரும் கொண்டு கடல் போல் பெருகிய பெரும் படையாமே என அதன் பெருமை கண்டோ, அஞ்சிப் போர்க் கடமையைக் கை நழுவ விடாது, போர்ப் புகழ் மீது கொண்ட பெரு வேட்கையால், உற்றார் உறவினர்களையும், ஊர் நாடுகளையும் பிரிந்து போய்ப் போராடி வெற்றி கண்டு புகழை நிலைநாட்டும் வாகைத்திணையும் உறவுடையவாம் என்றும், முன்னது அகப் பொருள் உணர்த்துவதாக, பின்னது அதன் புறமாம் என்றும் ஆசிரியர் தொல் காப்பியனார் விதி வகுத்தார். -