பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இ. புலவர் கா. கோவிந்தன் வேண்டும். ஆனால், அவருள் வெட்சிப் போர்க்கண் வீழ்ந்தார் பாராட்டப் பெறுவதிலர். கரந்தைப் போரில் வீழ்ந்தார் மட்டுமே பாராட்டப் பெறுகின்றனர். கல் நாட்டிச் சிறப்புச் செய்யவும் பெறுகின்றனர். வெட்சிவீரர், பகைவர் பசுக்களைப் பாதுகாவலான ஓரிடத்தே வைத்துப் போற்ற முன் வந்த பெருவீரராயின், அம்முயற்சியில் உயிரிழந்த அவ்வெட்சி வீரரையும் உலகம் பாராட்டி யிருத்தல் வேண்டும். ஆனால், இல்லை; காரணம், அவர்கள் போர் புரிந்தது அது கருதியன்று. தம் வறுமை போகப் பிறர் வளத்தைக் கொள்ளை கொள்ள வந்தவராதலின், அவர் செயல் அற்மில் செயலாம். ஆனிரை கவர்ந்து வரும் வெட்சி வீரர் இடைவழியில், அந்நிரையுள் கொழுத்த ஆ ஒன்றைக் கொன்று, அதன் ஊன் உண்டு மகிழ்வர் எனக் கூறும் அகநானூற்றுச் சான்று, அவர் கொடுமையினைக் குன்றிலிட்ட விளக்கென நின்று காட்டுவதாகும். ஆகவே, அவ்வெட்சியார் செயல் அறம் அல்லாச் செயலாம் என்பது உறுதியாம். ஆகவே, அவருள் மாண்டவர் பாராட்டப் பெற்றிலர். ஆனால், கரந்தை வீரரோ என்றால், வெட்சியார் கொண்டு சென்ற நிரைகளை மீட்டுக் கொணரும் அரும்பணி மேற்கொண்டவராவர். ஆகவே, அவர்கள் இறப்பு உயர்ந்தவராகப் பாராட்டப்பெற்று, நடுகல்லாகும் இறவாப் பெருநிலை அளிக்கப் பெற்றுள்ளனர். ஆகவே வெட்சியும் கரந்தையும் பகை கொண்டு போரிட விரும்பும் அரசர் இருவர் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கைகளாகக் கொண்டு பாடப் பெறுகின்றன வேனும், அவை, பற்றாமையால் வருந்திய பாலை நிலத்து மறவராலும், அவரால் தம் நிரை இழந்து வருந்திய முல்லை நிலத்து ஆயராலும் மேற்கொள்ளப்பட்ட பொருள் தேடும் போரும், அப்பொருள் காக்கும் போர்களுமேயாம் என்பது முடிபாம்.