பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 249 இவற்றிடையேயாகும். இதைத்தான் மார்க்கண்டேயரிடம் விஷ்ணு கூறினார். கதை செல்லிக் கொண்டு வரும் நாரதரை இடைமறித்து, "மார்க்கண்டேயர் என்பவர் யார்? விஷ்ணு அவரிடம் என்ன சொன்னார்?' என்று சனத்குமாரர் கேட்டார். மிருகண்டு, மார்க்கண்டேயர் என்பவர்களின் கதையை நாரதர் சொல்ல ஆரம்பித்தார். சலகிரமா தீர்த்தக்கரையில், மிருகண்டு முனிவர் விஷ்ணுவைக் குறித்து நீண்டகாலம் தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் ஆற்றல் பெருகப் பெருக இந்திரனும் தேவர்களும் பயந்தனர். மிருகண்டு தவத்தின் முடிவில் விஷ்ணு தோன்றினால், இந்திரப் பதவி வேண்டும் என்று கேட்டு, ஆட்சியிலிருந்து தன்னைத் தள்ளிவிடுவாரோ என்று இந்திரன் பயந்தான். தேவலோகத்திலிருந்து தங்களை எல்லாம் மிருகண்டு விரட்டி விடுவாரோ என்று தேவர்கள் பயந்தனர். ஆகவே இந்திரனும் தேவர்களும், விஷ்ணுவிடம் சென்று தங்கள் பயத்தை வெளிப்படுத்தி, ஒரு வழி சொல்லுமாறு வேண்டினர். அவ்வாறு சென்று பார்க்கும்போது விஷ்ணு பஞ்ச ஆயுதங் களுடன், கோடி சூரியப் பிரகாசமுடைய உடம்புடன் தாமரை போன்ற கண்களுடன் மஞ்சள் பீதாம்பரத்துடன் காட்சி தந்தார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்டு விஷ்ணு, “உங்களுக்குக் கவலை வேண்டாம். மிருகண்டுவை நான் அறிவேன். அவர் இவற்றிற்கெல்லாம் ஆசைப்படுபவர் அல்லர். நீங்கள் கவலை இல்லாமல் போங்கள். தீயவர்கள் கடுந்தவம் இயற்றினால் நீங்கள் பயப்படுவது நியாயம். அந்தத் தவத்தின் பயனாகப் பதவி பிடிக்கும் வேட்டையில் அவர்கள் இறங்கி விடுவார்கள். ஆனால் மிருகண்டு அத்தகையவர் அல்லர்” என்று சொல்லி அனுப்பினார்.