பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் உள்ளிட்ட மக்கள் எல்லாம், ஒன்று திரண்டு சென்று, புனலில் படிந்து ஆடியும், ஆற்றங்கரைக் கண்ணதாய பொழில்களில் வேனில் விழாக் கொண்டாடி இன்பம் துய்த்தும் மகிழப், புனலாட்டு விழா நிகழ்தற்கு இடமாகிய பெருமைமிகு ஆறு, அழகிய காஞ்சி ஆறு, எனக் காஞ்சி ஆற்றின் பெருமை பாடும், பரணர் பாட்டின் வரிகள் இவை:

“நின்மலைப் பிறந்து, நின் கடல் மண்டும், மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் காஞ்சியம் பெருந்துறை'.

... பதிற்றுப் ப்த்து: 48; 13-18.

இப்பாட்டின், ஈற்றடியில் இடம்பெற்றிருக்கும் 'காஞ்சி” எள்ற பெயர்ச் சொல், 'காஞ்சி' என்ற பெயர், சங்ககாலத் தமிழர் அறிந்த பெயரே அல்லது, வாழ வந்த வடமொழி யாளர், சூட்டிய பெயர் அன்று; என்பதற்கான வலுவான அகச்சான்ருக நின்று, தமிழக உண்மை வரலாற்றிற்கு, உற்ற துணையாக, அமைந்த பெருமைக்குரியதாகி விட்டது.

செங்குட்டுவன், தன் அவை புகுந்து, தன்புகழ் விளங்கும் கூத்து ஆடித், தன்னையும், தன்நாட்டவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கூத்தர் குழாத்திற்கு, வழங்கும் பரிசில் பொருள் களாம், எண்ணிலாக் குதிரைகள். தம் வெண்ணிறப் பிடரிமயிர், மடிப்புண்டு மடிப்புண்டு அலையத், தலை நிமிர்ந்து, நிரை நிரையாக நடைபோட்டுச் செல்லும் காட்சிக்குக், கரிய பெரிய தெளிந்த கடலிடையே, வரிசை வரிசையாக ஓங்கி எழுந்து வெண்னுரைதெரிக்கத் தலைமடிந்து ஓடிவரும் அலைக்காட்சியை உவமைகாட்டி பிருக்கும் நயம், உணர்ந்து பாராட்டற்குரியது.

13