பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

39

கூறினர். இவையனைத்தும் ஒருங்கே சேரின் உண்டாகும் மிகப் பேரொளியினைக் கற்பித்து, அதற்குச் சேரலாதனின் பெரும் போர்ப் புகழினை உவமித்தனர்.

தலைமிகுத்தல் - மேற்கொள்ளல். துப்பு - துணைவலி. துறை போதல் - இறுதிவரையும் பிரியாதே துணையாக நிற்றல், ‘அக்குரன்’ என்பான் பாரதப் போரில் நூற்றுவர்க்குத் துணையாக விளங்கிய ஒரு மாவீரன்; வள்ளன்மை மிக்கவன். அக்ரூரன் என்பார் வேறு இவன் வேறு. துணிவு - மனவூக்கம்; மனவூக்கம் இல்லாதபோது ஆண்மையானது சிறத்தல் இல்லையாதலின், ‘துணிவுடை ஆண்மை’ எனக் கூறினர்.

தும்பைப் பகைவர் - புகழ் குறித்துக் கடும்போரைச் செல்யும் மிகுவலி கொண்டாரான பகைவர்; அவர் வலிமிகுதியைக் குறிப்பவர், ‘அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்’ என்றனர்; அதற்கு முன்பேயும் பலப்பல வெற்றிப்போர்களைச் செய்து சிறப்புற்ற மாவலிமையும் செருக்கும் கொண்டவர் என்பதாம். கூற்று - உயிரை உடலினின்றும் கூறிட்டுப் பிரிப்பது; அது வெகுண்டு வரினும் தோற்றோடச் செய்யும் ஆற்றலுடையான் என்றது, சேரலாதனின் போராண்மையை வியந்து கூறியதாகும். ‘பகையெனிற் கூற்றம் வரினும் தொலையான்’ எனக் கபிலரும் இவ்வாறே உவமிப்பர் என்ப.(குறிஞ்சிக் கலி 43)

எழுமுடி - ஏழரசர் திருமுடிகள். திரு - வெற்றித்திருமகள். நோன்மை - வலிமை. சான்றோர் - படைமறவர்; புகழோடு சாதலே நிலையான செவ்வியுடைத்து ஆதலின் படைஞரைச் சான்றோர் என்றனர். அவர்க்கு மெய்ம்மறை எனவே, அவரை அழியவிட்டுத் தான் வெற்றிதேடலைக் கருதாது, அவர்க்குக் காவலாகித் தானே முனைமுகத்து நிற்கும் மாவீரன் இவன் என்பதாம்.

‘வானுறை மகளிர்’ என்றது அரம்பையரை. நலன் - நல்லழகு, பூச்சாலும் புனைவாலும் அல்லாதே இயல்பாகவே அமைந்துள்ள அழகு. வயங்கல் - விளங்கல். ‘கொடுங்குழை’ என்றது சேரமாதேவியை. இது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; கொடுங்குழையை உடையாள் என விரியும்.

தொகுதி - கூட்டம். பாடினி வேந்தே - பாடற்கு இனிதாகிய பல சிறப்புக்களும் கொண்ட வேந்தனே. பாடினி