78
பதிற்றுப்பத்து தெளிவுரை
மென்பது. துஞ்சுமரம் - கணையமரம்; மதிற் கதவுகட்குப் பின்பக்கமாக அவற்றுக்கு வலிமையாக அமைக்கப்படுவது. துவன்றிய - செறிக்கப்பெற்ற. மலர் அகன் பறந்தலை - மிக அகன்ற வெட்டவெளி: இதனைச் செண்டுவெளி என்பர். "மலரகன்" என்றது ஒருபொருட் பன்மொழி. இது புறமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையே அகழியை அடுத்ததாக அமைந்துள்ள வெளி; புறமதிலைக் கடந்து வரும் பகைவர் இதன்கண் விளங்கும் வீரருடன் கடும்போரிட்டு வென்ற பின்னரே அகமதிலை நெருங்கவியலும். நிலை - வாயிற்படி. தூங்குபு - தூங்கும்படியாக. வில்விசை - வில்லாகிய எந்திரம்: இது தானே இயங்கிப் பகைவர்மேல் அம்புமாரி பொழிவது. ஐயவி - ஐயவித்துலாம் என்னும் மதிற்பொறி. கடிமிளை - காவற்காடு; இதன்கண் வீரர் மறைந்திருந்து வரும் பகை வரைத் தாக்குவர். குண்டு - ஆழம். கிடங்கு - அகழி. பதணம் - அகமதிலின் உட்புறத்தே வரிசையாக நாற்புறமும் அமைந்துள்ள காவன் மேடைகள். அண்ணல் - தலைமை. கோடு - உச்சி. அகப்பா - கோட்டையின் பெயர்: இத்துணைக் கடுங்காவலமைந்த மதிலைத் தன் நாற்பெரும் படையுடன் சென்று கைப் பற்றினான் குட்டுவன் என்பதாம். 'குட்டுவன் அகப்பா வழிய நூறிச் செம்பியன், பகற்றீ வேட்ட ஞாட்பு (நற். 14)" என்று இதனை மீளப் பாண்டியன் கைப்பற்றிய செய்தியை மாமூலனார் குறிப்பிடுவர். இதனால் இவ்வரண் கடுங்காவல் மிகுந்ததென்பதும்; இதனைக் கைப்பற்றல் சிறந்த வெற்றிச் செயலாகக் கருதப்பட்டதென்பதும் விளங்கும். உழிஞை என்பது ஒருவகைக் கொடி; பொற்கொற்றான் என இந்நாளில் வழங்கப்பெறும். "உழிஞைப் போர்" ஆதலால் வெற்றி கொண்டதும் பொன்னாற் பெய்த உழிஞைப் பூவைச் சூடினான் என்க.
'போர்த்து' என்றது, ஆனேற்று உரியைப் போர்த் திருப்பதனைக் குறிப்பிட்டதாம். பறையால் - பறை யோசையால். புனல் செறுக்குநர் - தடைமீறிப் போகும் புதுப்புனற் பெருக்கை அடைத்து நிறுத்துவார். நீர்த்தரு பூசல் - நீர் விளையாட்டால் எழுகின்ற ஆரவாரம். அம்பு அழிக்குநர் - அம்பு எய்யும் பயிற்சி பெறுவார், வில்வளைத்து நாணேற்றி எழுப்பும் நாணொலியையும், அம்பைச் செலுத்துங் காலத்து எழுகின்ற ஒலியையும் இல்லையாக்குவோர். தலை - இடம். விழவு - விழா மலிதல் - சிறத்தல். யாணர் - புது வருவாய். தண்பணை - மருதநிலம். நண்பகல் - நடுப்பகல், கவலை - கவர்த்தவழி. கழல்கண் - கழன்று விழுதலைப்போலத்