பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிற்றுப்பத்து தெளிவுரை

5

இவர்களையன்றிப் சேரவரசர் பலர் புகழோடு வாழ்ந்திருத்தலும், அவர்களைப் புலமை சிறந்த தமிழ்ச்சான்றோர் பாடியிருத்தலும் கூடும் எனினும், அவற்றை எல்லாம் அறிவதற்கேற்ற வாய்ப்பினை நாம் பெற்றன மில்லேம்.

சேரவரசரின் தலைமைக் கோநகராக வஞ்சி மூலூரே வரலாற்றுக் காலந்தொட்டு விளங்கி வந்தது. அதன்கண் இருந்து அரசியற்றியோர் சேரர்குடியின் தலைமையாளராக விளங்கி வந்தனர். ஆயின் சேரவரசர் குடும்பத்தைச் சார்ந்த பலரும் பிறபிற இடங்களிலும், பெரும்பான்மையும் சுதந்திரமான தனியரசுகளை நிறுவிக்கொண்டு, அதே காலத்தேயேயும் அதன் பின்னரும் மாண்போடு வாழ்ந்திருக்கின்றனர்.

ஒரு கால அளவின் எல்லையிலேயே வாழ்ந்தவரான சிலரையே நாம் இந்நூலால் அறிகின்றோம். இது அக்காலத்தைய அரசியலமைப்பில், பெருநாட்டின் பகுதிகளைத் தம் குடும்பத்தாரின் நேரடியான ஆட்சிக்குள்ளாக முறைப்படுத்திப் பகுத்து வாழ்ந்த அரசியல் நெறியையும் நிர்வாகச் செறிவையும் நமக்குக் காட்டுவதுமாகும்.

கடைச்சங்க காலத்துச் சேரவளநாடு நிலப்பரப்பாலும் ஆட்சியின் எல்லையாலும் மிகமிகப் பரந்து செறிந்த தமிழ்ப் பெருநாடாக விளங்கியது என்பதையும் இப் பதிற்றுப்பத்து விளக்குகின்றது. ஏறக்குறைய இந்நாவலந்தீவின் தென்பகுதி முழுவதையும் தம் நேரடியான ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்த தோடு, விந்தியப்பெருவரைக்கு வடபாலும் தண்டுகொண்டு சென்று, அங்கிருந்த அக்காலவரசரையும் வெற்றிகொண்டு, வடபால் இமயம்வரைக்கும் தமிழருடைய மறமேம்பாட்டைச் சேரமன்னர்கள் நிலைபெறுத்திப் புகழ்பெற்றிருக்கின்றனர். இதன்மேல், வடமேற்கு எல்லைப்பகுதிகளுள் வந்து புகுந்து, அப் பகுதிகளுட் சிலவற்றைக் கைப்பற்றியிருந்த யவனர்களையும் வென்று, நிலத்தை மீட்டு வெற்றி கொண்ட சிறப்பினையும் செந்தமிழ்ச் சேரர்கள் அன்று பெற்றிருக்கின்றனர்.