பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கொண்ட மனம் அதன் இயல்பைக் காட்டியது. ஷேக்ஸ்பியரின் நாடகக் காதல் ஜோடிகளின் பெயர்களை இவர்களுக்கு இட்டு மறைமுகமாக அழைத்து, மறைமுகமான மகிழ்வு எய்தினர் நண்பர்கள்.


இவற்றைப் பற்றித் துளியும் சட்டை செய்யவில்லை. செந்தில் நாயகம்-யாமினி இணை. அவன் சந்தோஷத்தின் எல்லையில் நின்றான். ஆனால் யாமினி எப்போதாவது மனம் மறுகி நிற்பாள். 'அவர் பணக்காரப் பிள்ளை ஆயிற்றே ! நாளைக்கு தன் அளவில் ஒரு பெரிய இடத்துப் பெண் கிட்டினால் என்னை மறுத்து விடலாமல்லவா ?' என்று துணுக்குறுவாள். அப்போது அவளது எழிலார் வதனம் கறுத்துச் சிறுக்கும். அவன் அவளை அண்டி, விவரம் கேட்பான். எதைச் சொல்வாள் அவள்?சிரித்து மழுப்பி விடுவாள். அப்போதெல்லாம் தலைவியைக் காணும் தலைவனின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டிய தமிழ் மறையின் வரிகளை நல்ல குரலில் பாடிக் காட்டுவாள் அவள். நல்ல முறையில் அமைதியான புன்னகைப் பூங்கொத்துக்களை அவன் முன் சமர்ப்பித்து விட்டு, 'நான் தெய்வமகள் அல்லள்; மயிலும் அல்ல; ஒரு மானுடப் பெண், ஆம் நான் உங்களுடைய யாமினி! ....ம்....அது என் வாழ்வு; கனவு!...அதுவே என் கல் விதியுங்கூட! ஆண்டவன் நம்மை ஆசீர்வதிப்பார்...இது உறுதி...!" என்று வியாக்யானம் செய்து நகைப்பாள் அவள்.

ஆனால், அவளது பொன்மலர்ச் சிரிப்பே விதியின் சிரிப்பாகி விடுமென்று அவன் நினைத்தானா?

ஊஹும்.இல்லை!...இல்லவே இல்லை!...

வழிந்தோடிய சுடுநீர்த்திவலைகள் அவருடைய விரல்களைச் சுட்டன. 'விரல்களை-இந்தக் கையை தீயிட்டுப் பொசுக்கத்தான் வேண்டும்!ஆம்; பொசுக்கத்தான் வேண்டும் !அப்படிப் பொசுக்கி விட்டால் மட்டும், தீய்ந்து பொசுங்கிய அந்தப் பேதையின் வாழ்வு மலர்ந்துவிடுமா?'-கிறுக்குக் கொண்டாற் போன்று அவர் கைகள் இரண்டையும் கபால