பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25

வேய்ந்த பூநாறு கொழுநிழற் கீழ்க் கடிக்குருக் கத்திக் கொடி பிடித்துத் தகடுபடு பசும் பொற் சிகரங்களின் முகடு தொடுத்து வந்து இழிதரும் அருவி ஆடகப் பாறை மேல், அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக் குயில்கள் இசை பாடத் தண்தாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப் பாறை மணித்தலத்து மீமிசை, நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாவம் கொள விரித்து, முளை இளஞாயிறு இளவெயி லெறிப்ப, ஓர் இளமயிலாடுவது நோக்கி நின்றாள்.”

என்பது நக்கீரர் வாக்கு. ஆம்! அவள் நிற்கும் அழகினைக் காட்டிலும் அவளை ஈர்த்து ஆடும் மயிலினைக் காட்டிலும் அவற்றை விளக்கிய உரைநடையின் அழகன்றோ அனைவர் உள்ளத்தையும் கவர்ந்து உருக்குகின்றது.

உரையாசிரியர்கள்

இறையனார் களவியலுரைக்குப் பின் நாட்டில் பல் வேறு நூல்களுக்கு உரைகள் எழுதப்பெற்றன. உரை நடை இலக்கியம் வேறு வகையிலும் வளர்ச்சியுற்றது. அவ்வளர்ச்சிக் கிடையில் எத்தனையோ மாற்றங்களும் ஏற்றத் தாழ்வுகளும் இடம் பெற்றன. வேற்றுமொழிக் கலப்பினால் தமிழ் உரைநடை உருமாறிற்று—பிறழ்ந்தது—பின் சிறந்தது. எத்தனையோ வகைகளில் உரைநடை வளரலாயிற்று. ஒன்றன்பின் ஒன்றாகத் தொட்டுக் கண்டு விரைந்து நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைவாயிலுக்கு வரலாம்.

சங்ககாலத்திலும் அச் சங்கம் மருவிய காலங்களிலும் பின் இருண்ட காலத்திலும் பல இலக்கியங்கள் எழுந்தன. அவற்றிற்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்திற்கும் நாட்டில் உரை கண்ட நல்லவர்கள் பல்லோர். அவர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப் பெறுபவர் பேராசிரியர், நச்சினர்க்கினியர், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சேனவரையர், தெய்வச்சிலையார்,

2