பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26

கல்லாடர் என்பவர்களே. இவர்தம் உரைகள் இன்றளவும் தமிழை உரையிட்டு ஏற்றங்கண்டு போற்றும் வகையில் அமைந்துள்ளதை யாவரே அறியாதார்? உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரை, இலக்கணம் இலக்கியம் என்ற இரண்டற்கும் உள்ளது. இவர் தொல்காப்பியம் முழுதுக்குமே உரை எழுதினர் என்பர் (அதில் கடைசி நான்கு இயலுக்கு உரை காணக்கிடைக்கவில்லை போலும்). இளம் பூரணர், சேவைரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்ற பெருமக்கள் தொல்காப்பியத்துள் சிற்சில பகுதிகளுக்கு உரை எழுதினவர்கள் என்பதை இன்றும் அவர்தம் உரைவழியே காண்கிறோம். சீவகசிந்தாமணி, பத்துப் பாட்டு, கலித்தொகை என்ற காப்பிய, சங்க இலக்கியங்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். குறுந்தொகைக்கும் இவர் உரை எழுதினார் என்று ஐயர் அவர்கள் அந்நூலின் முன்னுரையில் குறித்துள்ளார்கள். இவர்களையன்றி இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரும், திருக்குறளுக்குப் பரிமேலழகரும் எழுதிய உரைகள் உலகம் உள்ளளவும் வாழும் திறன் பெற்றுவிட்டன. குறளுக்குப் பதின்மர் உரைகண்டனர் எனவும் அவற்றுள் சிலவே கிடைக்கப்பெற்றன எனவும் அறிகிறோம் சிலம்பின் அரும்பத உரையாசிரியரும் நம்மால் போற்றத் தக்கவரன்றாே? திருக்கோவையார் முதலிய சமய இலக்கியங்களுக்கும் உரை கண்ட பெருமை அக்காலத்தியதே. இவ்வாறு,தமிழக வரலாற்றின் இடைக்காலத்தில் பண்டைத் தமிழ் நூல்களை உலகுக்கு உணர்த்தவும் அவற்றை எல்லையற்ற காலம் நிறைவுற்று வாழ வைக்கவும் கருதிப் பல நல்லவர்கள் உரை எழுதினர்கள். அவர்கள் தமிழ் உரைநடையை வளர்த்ததோடு அப்பழம் பெரும் இலக்கியங்களையும் வாழவைத்த பெருமைக்கும் இலக்காகி விளங்குகின்றார்களன்றாே? இவர்தம் உரைநடைகளுள் ஒரு சிலவற்றைக் கண்டு மேலே செல்லல் பொருத்தமானதாகும். இவர்தம் காலம் ஏறக்குறையக் கி. பி. பதினேராம் நூற்றாண்டிற்கும் பதினான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்