பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27

பட்ட காலமே என்பர் ஆய்வாளர். ஓரிருவர் காலத்தான் முன்னே செல்ல வாய்ப்பும் உண்டு. இக்காலத்தில் தமிழில் வேற்று மொழிகள், சிறப்பாக வடமொழி, விரவிக் கலந்துள்ளமையை நம்மால் காணமுடிகின்றது; என்றாலும் சில உரையாசிரியர்கள் பழையதிலும் பழையதான வகையில் தம் உரைப்போக்கை அமைத்துள்ளமையை அறிகின்றாேம். இவர் தம் உரைகள் மூலங்களுக்கு உரைகளே என்னும் நினைவை மறப்பித்து, தாமே பேரிலக்கியங்களோ என்னும் நினைவையும் சிற்சில இடங்களில் உண்டாக்குகின்றன என்பதைப் பயின்றாேர் நன்கு உணர்வர். ஒரு சில இடங்களை நோக்கின் 'நூலாசிரியர் இத்தகைய நுண்ணுணர்வுடன் பாடினரா? அன்றி உரையாசிரியர் உளவண்ணமும் உரை வண்ணமும் இத்தகைய ஏற்றத்தைத் தருகின்றனவா?’ என்று வியக்கத் தோன்றும். எனவே, உரையாசிரியர்கள் ஆய்ந்தமைந்த கல்வி அறிவும் முடிவிலா ஆற்றலுடைமையும் பெற்றமையே அவர்தம் சிறந்த உரைகளை உலகில் அன்று மட்டுமன்றி இன்றும் என்றும் வாழவைக்க உதவின—உதவுகின்றன—உதவும் என்பது பொருந்தும். ஒரு சில காணலாம்.

இளம்பூரணர் இலக்கணத்துக்கு உரை வகுக்கின்றார். களவியல் முதற் சூத்திரத்தில் தொல்காப்பியர் தம் நூலில் முப்பொருளை வைத்த முறைமையை இவர்,

‘அறனும் பொருளும் இன்பமும்' என்னாது ‘இன்பமும் பொருளும் அறனும்' என்றது என்னை யெனின், பலவகை உயிர்கட்கு வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றர்க் கல்லாது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாய பொருளும் அப்பொருளுக்குக்