பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா குருதியோட்டத்தோடும், தன்னிகரில்லா ஆற்றல் மிக்கத் தசைக் கூட்டத்தோடும் செம்மாந்து என்றும் வாழ வேண்டும் என்று வகுத்துத்தந்த வழிகள்தான் யோகாசன அமைப்பு முறைகள். இந்திய உடற்பயிற்சிகளுக்குள் மூன்று பயிற்சி முறைகள் உண்டு 1. தண்டால் பயிற்சிகள். 2. பஸ்கிப் பயிற்சிகள் 3. ஆசனப் பயிற்சிகள். தண்ட் (Dand) என்ற வடமொழிச் சொல்லுக்கு புஜம் என்று பொருள். கைகளை வலிமையாக்கும் பயிற்சிகளே தண்டால் பயிற்சிகளாகும். உட்கார்ந்து எழும் பயிற்சிகள் பஸ்கிகளாகும். பஸ்கிப் பயிற்சிகளால் தொடைகள், கெண்டைக் கால் தசைகள் வலிமையடைகின்றன. வயிற்றுப் பகுதிக்கு உள்ளே உள்ள உறுப்புக்களை வலிமைப்படுத்தி, சிறப்பாக செயல்படத் தூண்டி, மூளை நரம்புப் பகுதிகளை முழுமையாக செயல்படுத்த இந்த ஆசனப் பயிற்சிகள் உதவுகின்றன. உடம்பைக் காக்கும் உபாயம் இதுதான் என்று உணர்ந்து தெளிந்த பிறகு, உபாயமாய் விளங்கும் யோகாசன அமைப்பினை சற்று விரிவாக விளங்கிக் கொண்டோமானால், நாம் செல்லும் வழியில் தெளிவு இருக்கும். சேரும் வழியில் பொலிவு கிடைக்கும். சேரும் நிலையில் வலிவு பிறக்கும். செயற்கரிய செய்தோம் என்ற பெருமையுடன் சீரிய திறமையும் கிடைக்கும் என்று தெளிந்த மனதுடன், நமது பயணத்தைத் தொடர்வோமாக.