பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எப்படியிருந்தாலும், உடலை பயிற்சிக்கு ஏற்றாற்போல வளைக்கவும் நீட்டவும் போன்ற செயல்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் உடையை அணிந்து கொள்வது நலம் பயப்பதாகும். (ஈ) பயிற்சிக்கு முன்: பயிற்சி செய்கின்ற இடம், நல்ல காற்றோட்டமுள்ள இடமாக இருப்பது மிகவும் அவசியம். சாமான்கள் நிறைக்கப்பட்ட, புழுதி நிறைந்த புழுக்கம் உள்ள அறையோ அல்லது வெட்டவெளிப்பகுதியோ ஆசனப் பயிற்சிக்கு ஏற்றதல்ல. தூய்மையான காற்றைப் பெறுகின்ற வகையில் அமைந்திருக்கும் இடமே பயிற்சிக்கு ஏற்ற இடமாகும். இடத்தைத் தெரிந்த பின், மேலும் சில முக்கிய குறிப்புக்களைத் தெரிந்து கொண்டு, அதனை முக்கியமாகப் பின்பற்ற வேண்டியது தலையாய கடமையாகும். 1. ஆசனப் பயிற்சி செய்பவர், தரையின் மீது சமுக்காளமோ கம்பளமோ அல்லது வேறு ஏதாவது ஒரு விரிப்பின் மீது இருந்துதான் செய்யவேண்டும். வெறுந்தரை அவ்வளவு உசிதமானது அல்ல. 2. ஆசனம் செய்யும் போது, வயிறு காலியாக இருக்க வேண்டும். அதாவது, ஆசனம் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு முன்னதாகவே உணவருந்தியிருக்க வேண்டும். அப்பொழுதுதான், உண்ட உணவு நன்கு ஜீரணமாயிருக்கும். உடலும் தயார் நிலையில் இருக்கும். ஆசனம் செய்து, 15 நிமிடத்திற்குப் பிறகே தண்ணிர் குடிக்கலாம். அல்லது உணவு உண்ணலாம். ஆசனப் பயிற்சியை முடித்த உடனே தண்ணிர் குடிப்பதும், உணவு உண்ணுவதும் உடலுக்கு நலம் பயப்பதாகாது.