பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

27. பரிசளிப்பு

சொல்லதில் பொதிந்தி ருக்கும்
சூக்குமப் பொருள்போ லுள்ளத்
தல்லதில் பூவா அல்லி
அகம்மலர்ந் தமர்ந்தி ருந்தும்,
இல்லதி லிருந்தாங் கென்றன்
இருவிழி யெதிர்பார்த் தேங்கக்
'கல்லதில் வடித்த சிற்பம்
கால்கொண்டாங்' கணுகக் கண்டேன்!

'மண் காதல் கொண்டு சென்ற
மறமன்னன், மனது மாறிப்
பெண்காதல் கொண்டா' னென்று
பேசுமா றெனைப்பி பீடிப்பீர்!
பண்காத லித்துப் பாடும்
பைம்பொழில் குயிலாய்ப் பன்னி
விண்காதல் செய்த ஆலின்
விருத்தாந்தம் விளம்பு கென்றாள்.

கரும்பென இனிக்கும் காதல்
காழ்கொண்டு, காக்கும் காலம்
வரம்பெனற் கில்லை யாய்ப்போய்,-
வனிதையே! வையத் தில்நீ
அரும்பென மலர்ந்து மாரா
தகம்நொந்த சுரும்பாய் நானும்,
துரும்பென இளைத்தேன், தூக்கம்
தொலைந்துபோய்த் துயர்தோய்ந் தென்றேன்.

'ஏந்தலே!’ என்றெ ழுந்தாள்;
இரக்கமே குரலா 'யென்றன்
மாந்தளி ரனைய மேனி
மயக்கிற்று போலு மென்றென்
கூந்தலைக் கோதி, நெற்றிக்
குறும்வியர் வொற்றிக் கொண்டே,
தீந்தமி ழிதயத் தன்றோ
திட்பமே திகழ்வ ' தென்றாள்.