பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


மேச்சேரிச் சேவல், குப்பை
மேடேறிக் கூவிற் றென்ன,
ஆச்சாரி மார்கள், துவைதம்,
அத்வைதம், விசிட்டாத் துவைதப்
பேச்சேறிப் பிளவு மேறிப்
பிறத்தியா ரரசி லேறி
மூச்சேறித் திணறி யாதி
மூலத்தை யழைத்தார் போலும்!

பயிரொடு, மரம்பூ டாதி,
பறவைகள், விலங்கு, மக்கள்
பெயரிடும் பெண்மை யாண்மைப்
பேதமற் றிணைந்து பேணும்
உயிருட லுண்டு பண்ணி
யுதித்தொழிந் தொழியா துள்ளோம்
செயிரடல், அழல்,சி ரித்தல்,
செயல்படல், துய்த்தல் செய்தே!

ஆராய்ச்சி யற்ற நாட்டில்
அறிவாட்சி யறவே யற்றுப்
பாராட்சி பரத்தர்க் காக்கிப்
பணியாட்சிப் பக்தர்க் காக்கி
ஊராட்சி வழக்கு வாதா
யுட்பகைக் குரிமை செய்திங்
’கேராட்சி யெளியே’ மென்ன
இருளாட்சி செய்தோம் நாமே!

‘சவ’மென முடிக்க வேயிச்
சகத்தினிற் பிறந்தோ மேனும்,
‘நவ’மெனக் குறிக்கோ ளொன்று
நயந்துசா தித்து, நன்கிப்
புவிமனங் குளிர வைத்துப்
போவதற் காக வுள்ள
‘தவ’மெனும் சொல்லை யேநாம்
தப்புக்கு செய்தோம் தானம்!